திருவண்ணாமலையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருவண்ணாமலை பகுதியில் தொடர் இருசக்கர திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை பகுதியில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருடு போவது வாடிக்கையாக இருந்தது. குறிப்பாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் மற்றும் பொது மக்கள் நடமாடும் பகுதிகளில் உள்ள மாடவீதி மற்றும் கடைவீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை திட்டமிட்டு திருடுவது வழக்கமாக சம்பவமாக மாறியது. இது குறித்து திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் இரு சக்கர வாகனங்கள் திருடு போகும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அதில் இந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்களை ஒரு வாலிபர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது, தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து மருத்துவமனை மற்றும் கடைகளின் முன்பு நிறுத்தப்படும் புத்தம் புதிய இருசக்கர வாகனங்களை நோட்டமிடும் இந்த வாலிபர் சம்பந்தப்பட்ட இருசக்கர உரிமையாளர் திரும்பி வர நேரமாகும் என்பதை உறுதி செய்த பிறகு மிக சாதுர்யாமாக இரு சக்கர வாகனங்களில் உள்ள சைடு லாக்கை கண்ணிமைக்கும் நேரத்தில் உடைத்து தங்களுடைய சொந்த வாகனத்தை எடுத்துச் செல்வது போல எந்தவித பதற்றமும் இன்றியும் இரு சக்கர வாகனங்களை திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வேலூர் கோட்டை பின்புறம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் தும்பப்பா என்கிற விக்னேஷ் இந்த தொடர் திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அது மட்டும் இன்றி மறைத்து வைத்திருந்த 15 இருசக்கர வாகனங்களை அதிரடியாக காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருடப்படும் இருசக்கர வாகனங்கள் வேலூர் பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் பழுது செய்யும் நபரின் உதவியுடன் தனித்தனி பாகங்களாக பிரித்து விற்பனை செய்வதும் மற்றும் போலி நம்பர் பிளேட் பயன்படுத்தி சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் திருட்டு இரு சக்கர வாகனங்களை வாங்கும் நபர்கள் போலி நம்பர் பிளேட் பயன்படுத்தி சமூகவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த இருசக்கர திருட்டில் தொடர்புடைய மேலும் சில நபர்களை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் பேசுகையில், திருடப்படும் வாலிபர் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தை மட்டும் குறி வைத்து திருவடுவதாகும், இதனை திருடுவதற்கு எளிமையான முறையில் உள்ளதாகவும் பழைய இரு சக்கர சாவியை பயன்படுத்தி தற்போது உள்ள இருசக்கர வாகனங்களில் சுலபமாக லாக்கினை திறந்து எடுத்து செல்கிறார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்க பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.