Crime: ஆரணியில் பொதுமக்களிடம் சீட்டு பணத்தை ஏமாற்றி வந்த தறி தொழிலாளி கைது
ஆரணி பகுதியில் பொதுமக்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் சீட்டு பணத்தை ஏமாற்றி வந்த தறி தொழிலாளியை குற்றப்பிரிவு பொருளாதார போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை ( Tiruvannamalai News) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி லட்சுமி நகரை சேர்ந்தவர் பரசுராமன் வயது (41). இவர் ஆரணியில் பல ஆண்டுகளாக கூலிக்கு தறி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி கொச பாளையத்தை சேர்ந்த சங்கர் என்பவர் நெசவுத்தொழில் மூலமாக அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்தும் வந்துள்ளனர். இதனால் இருவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சங்கர், நானும் எனது மனைவி வெண்ணிலா இருவரும் சேர்ந்து எங்கள் வீட்டில் பட்டு சேலை வியாபாரம் மற்றும் மாத சீட்டு ஆகியவற்றையும் நடத்தி வருகிறோம். இதில் எங்களுக்கு அதிக லாபம் கிடைத்து வருகிறது என பரசுராமிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி பரசுராமன் சங்கரிடம் சீட்டு கட்டியுள்ளார். மேலும் பரசுராமன் இன்னும் நாங்கள் 5 சீட்டுகள் நடத்தவுள்ளோம் அதில் நம்பிக்கையான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் உங்களுக்கு தெரிந்தவர்களை சேர்த்து விடுங்கள் என பரசுராமன் கூறியுள்ளார். இதனை நம்பி சங்கர் அவருக்கு தெரிந்தவர்கள் சிலர் என மொத்தம் பத்து பேரை சேர்த்துள்ளார்.
சீட்டு பணம் ஏமாற்றியவர் மீது திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார்
அவர்களும் மாத மாதம் பணத்தை செலுத்தியுள்ளனர். மாதச் சீட்டு முடிவு அடைந்த பின்னர் சீட்டு தொகை செலுத்தியவர்களுக்கு தங்கள் பணத்தை திரும்பி கேட்டபோது சங்கர் பணத்தை திரும்பி தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். அதேபோல் பரசுராமன் மாதம் சீட்டு என ரூபாய் 3, லட்ச 51,ஆயிரத்து 760ஐ தருமாறு சங்கரிடம் சென்று கேட்டுள்ளார். ஆனால் சங்கர் இன்று, நாளை என பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பரசுராமன் சங்கரிடம் சென்று காசோலை மற்றும் பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். அதன் பிறகும் சங்கர் பணத்தை தராமல் ஏமாற்ற முயல்வதை அறிந்தவுடன் பரசுராமன் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் பரசுராமன் கடந்த வாரம் புகார் அளித்திருந்தார்.
சீட்டு பணம் ஏமாற்றியவர் கைது
அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆரணியை சேர்ந்த சங்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு நபர்களிடம் சுமார் 27 லட்சத்தி 71 ஆயிரத்து 760 ரூபாய் மாத சீட்டு நடத்தி வசூல் செய்து திரும்பி தராமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் சங்கர் மற்றும் வெண்ணிலா ஆகியோரிடம் சீட்டு பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த நபர்கள் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அலுவலகத்தை அணுகுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.