நிலத்தகராறில் சொந்த தாத்தாவை கட்டையால் அடித்து கொன்ற கொடூர பேரன் - தி.மலை அருகே அதிர்ச்சி
தண்டராம்பட்டு அருகே நிலத்தகராறு காரணமாக தாத்தாவை கட்டையால் அடித்து கொலை செய்த பேரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த எடத்தனூரைச் சேர்ந்தவர் ஏழுமலை வயது (90). இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி முத்தம்மாள் இவர்களுக்கு மகன் தண்டபாணி உள்ளார். இவரும் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி அன்னபூரணி இவர்களுக்கு மகன்கள் விஜயராஜ் மற்றும் திருவேங்கடம், வாசுதேவன் உள்ளனர். ஏழுமலை தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏழுமலை குடும்பத்துக்கும் தண்டபாணியின் மைத்துனர் பரமசிவம் குடும்பத்திற்கும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலப்பிரச்சினை தொடர்பாக தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தண்டபாணியின் இரண்டாவது மகன் திருவேங்கடம் வயது (34) தனது தாய் மாமன் பரமசிவத்தின் மகளை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நிலத்தகராறில் சொந்த தாத்தாவை அடித்து கொலை
அதனை தொடர்ந்து நிலப்பிரச்சனை தொடர்பான வழக்கு தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏழுமலை மற்றும் பரமசிவம் தரப்பினர் ஆஜராகினர். பின்னர் ஏழுமலை எடத்தனூருக்கு திரும்பி செல்வதற்காக நகரப் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தார். அப்போது அவரை திருவேங்கடம் வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து கீழே இறக்கி தனது இரு சக்கர வாகனத்தில் அமரவைத்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்த போது ஏழுமலை உடல் முழுவதும் காயங்களுடன் இருந்துள்ளார். இதனைக் கண்ட தண்டபாணி என்ன நடந்தது என கேட்டார் "உன் மகன் திருவேங்கடம்" என்னை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வரும்போது தண்டராம்பட்டு அடியார் சுடுகாட்டுப்பாதை எதிரே வந்த போது இருசக்கர வாகனத்தில் இருந்து என்னை கீழே இறக்கி நிலப்பிரச்சனைக்கு "நீ தான் காரணம் அதனால் நீ செத்துப்போ எனக்கூறி அருகில் இருந்த கட்டையால் என்னை பலமாக தாக்கி காயம் ஏற்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்து விட்டு விட்டான் எனக் கூறி கதறி அழுதுள்ளார்.
தாத்தாவை கொலைசெய்த பேரனை கைது செய்த போலீசார்
உடனடியாக அங்கு இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தொலைபேசிமூலம் அழைத்தனர், பின்னர் ஏழுமலையை ஆம்புலன்ஸில் ஏற்றி தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஏழுமலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் தண்டபாணி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருவேங்கடத்தை கைது செய்து விசாரணை நடத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். நில பிரச்னை காரணமாக சொந்த தாத்தாவை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது.