Crime: கூட்டுறவு வங்கி ஊழியர் கழுத்து அறுத்து கொலை - போலீசார் விசாரணை
வாணாபுரம் அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து காவல் துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த எடக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி வயது (52), இவருக்கு திருமணமாகி மீனாட்சி வயது (50) என்ற மனைவியும் விக்னேஷ் வயது (27), அபிராமி வயது (23), ஸ்ரீதர் (16) இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் வீராசாமி தென்கரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காசோலையை பெரும் பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதால் அதிகாரி வீராசாமியை பணியிடம் நீக்கம் செய்யப்பட்டு வேலையின்றி வீட்டிலேயே இருந்தார். அதனைத்தொடர்ந்து கடந்த 15-ம் தேதி தனது வீட்டில் இருந்து விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் விவசாய நிலத்திற்கு சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை விவசாய நிலத்தில் உள்ளாரா என அங்கு மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் வீராசாமி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகில் அவரது செருப்பு மற்றும் செல்போன் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள். மேலும் அங்கிருந்த கிணற்றில் எட்டி பார்த்தபோது ஆழமான பகுதியில் உயிரிழந்த நிலையில் வீராசாமியின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு அங்கிருந்தவர்கள் வாணாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணற்றில் இருந்த வீராசாமியின் உடலை காவல்துறையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் மீட்டு உடலை மேலே கொண்டு வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் வீராசாமியின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் இருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி, தண்டராம்பட்டு ஆய்வாளர் தனலட்சுமி, துணை ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது மனைவி மீனாட்சி வாணாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகாரில் தெரிவித்திருந்தார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணியிடம் நீக்கம் செய்யப்பட்ட கேஷ்சியர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.