புதுச்சேரி : தீவிர மோட்டார் சோதனை சிக்கிய விஷயம்.. மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் கைது
போலீசார் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன், போலீசார் அய்யனார், விஸ்வ நாதன், ஹரி, ஞானமூர்த்தி ஆகியோர் புதுச்சேரி - கடலூர் நுழைவாயில் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு உயர்ரக மோட்டார் சைக்கிளில் 3 பேர் கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீசார் கை அசைத்தனர். ஆனால் அவர்கள் நிற்காமல் தப்பிச்செல்ல முயன்றனர். உடனே போலீசார் தங்கள் வாகனங்களில் சிறிது தூரம் விரட்டிச்சென்று அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை கிருமாம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு சென்று போலீஸ் பாணியில் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஓட்டிவந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு கம்பர் நகரை சேர்ந்த தினேஷ்ராஜ் (வயது 22), நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்த எழிலரசன் (23), நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடியை சேர்ந்த பரத்குமார் (20) என்பது தெரியவந்தது. புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த பிரவீன்ராஜ், அரியாங்குப்பம் தேங்காய்த்திட்டை சேர்ந்த மணிகண்டன், பாகூரை அடுத்த சேலியமேட்டை சேர்ந்த தமிழ்வேந்தன் ஆகியோருடைய மோட்டார் சைக்கிள்களை திருடியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
மேலும் புதுச்சேரி பகுதியில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடியதாக கூறினர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் நெல்லிக்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு, அடிதடி, கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும் புதுச்சேரி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: Crime : காணாமல்போன பெண்.. சடலத்தை தின்ற நாய்கள்.. பதறி ஓடிய மக்கள்.. என்ன நடந்தது?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்