திருவண்ணாமலையில் ஒரே இரவில் 102 மாணவர் விடுதிகளில் ஆட்சியர் ரெய்டு - போலி வருகை பதிவேடு மூலம் பணம் அடித்தது அம்பலம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 102 விடுதிகளில் சோதனை போலி பதிவேடுகள் முறைகேடு செய்தது அம்பலம் விடுதி காப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்ய என ஆட்சியர் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 57 விடுதிகளும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 45 விடுதிகளும் என மொத்தம் 102 விடுதிகள் உள்ளது. இந்த விடுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் விடுதிகளில் உள்ளூர் மாணவர்களும் தங்கி படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். உள்ளூர் மாணவர்கள் பெரும்பாலோனோர் விடுதியில் காலை மற்றும் மதிய உணவு மட்டும் சாப்பிட்டு விட்டு சென்றுவிடுவார்கள். இரவு நேரங்களில் தங்குவதில்லை மாணவர்கள் இரவில் தங்குவது போன்ற கணக்கு காட்டி அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தை விடுதி காப்பாளர்கள் முறைகேடு செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில்தான் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள 102 விடுதிகளிலும் ஒரே நேரத்தில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டிருந்தார். பெரும்பாலான விடுதிகளில் இரவு முறைகேடு நடப்பதால் அனைத்து விடுதிகளிலும் இரவு நேரத்தில் சோதனை செய்ய திட்டமிட்டார். விடுதிக்கு 2 நபர்கள் வீதம் மொத்தம் 204 அதிகாரிகள் கொண்ட குழுவை ரகசியமாக நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டதுடன் போளூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உள்ள மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த வருகை பதிவேட்டில் 55 மாணவர்கள் தங்கியிருப்பதாக இருந்தது, ஆனால் 32 நபர்கள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. இவர்கள் போலி வருகை பதிவேடு மூலம் உணவுப் பொருட்கள் முறைகேடு செய்தது அடிக்கடி மாணவர்களை மதிய உணவுக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பிவிட்டு இரவு உணவு தருவதாக பொய் கணக்கு காட்டிதும் தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிக்கு மாவட்ட ஆட்சியர் சென்றிருந்தார். அங்கு ஒரு மாணவர் கூட இல்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுதி காப்பாளரிடம் விசாரித்துள்ளார் அதற்கு அவர் காலையில் 10 மாணவர்கள் வந்து சாப்பிடுவார்கள் மற்ற நேரங்களில் எப்போது வருவார்கள் என தெரியாது என்று கூலாக கூறியுள்ளார். இதனை கேட்டு கடும் கோபம் அடைந்த மாவட்ட ஆட்சியர் விடுதி காப்பாளர்கள் மட்டுமே சாப்பிடுவதற்காக அரசு விடுதி நடத்தப்படவில்லை இந்த விடுதியை உடனே மூட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும் அங்குள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவிகள் விடுதிக்கு சென்றார் அங்கு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருப்பதற்கு பதிலாக 22 பேர் மட்டுமே இருந்தனர். இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் மாவட்ட ஆட்சியர் விசாரித்தபோது அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து வருகை பதிவேடு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அதிலும் முறைகேடுகள் நடந்திருப்பது ஆதாரங்களுடன் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அருகில் உள்ள ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிக்கு மாவட்ட ஆட்சியர் சென்று ஆய்வு செய்தார். ஆனால் அங்கு எல்லாமே சிறப்பாக இருப்பதை பார்த்து விடுதி காப்பாளர் சரஸ்வதியை பாராட்டினார். அங்கு இருந்த மாணவிகள் ஆட்சியரிடம் செல்ஃபி எடுத்து கொண்டனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூறுகையில்: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை தவிர 102 மாணவர்கள் விடுதிகள் ஒரு சமயத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி ஆய்வு நடத்திய விடுதிகளில் உள்ள நிறை குறைகளை குறித்து அரசு அறிக்கையாக அனுப்பி வைக்கவும் உள்ளோம். நாங்கள் நடத்திய சோதனை முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென நடத்தப்பட்டது என்றார்.
இதுகுறித்து ஆய்வு நடத்திய அதிகாரிகள் வட்டாரத்தில் பேசுகையில்: மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கிய மாணவர்கள் எண்ணிக்கையும் வருகை பதிவேடுகள் முரண்பாடாக உள்ளது. நாங்கள் நடத்திய விசாரணையில் விடுதிக்கு வராத பல மாணவர்களும் உணவு சாப்பிடுவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் உணவு மானியம் உள்ளிட்டவை முறைகேடாக பயன்படுத்தியது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட விடுதி காப்பாளர்கள் இரவு நேரங்களில் விடுதியில் தங்குவது இல்லை.மேலும் இது தொடர்பாக முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று அறிக்கையை வழங்கியுள்ளோம். இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்டு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.மேலும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட விடுதி காப்பாளர்களை கூடிய விரைவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்