திருவண்ணாமலை : சதுரங்க வேட்டை பட ஸ்டைலில் ஒரு சங்கு மோசடி.. 8 பேர் கொண்ட கும்பல் சிக்கியது எப்படி?
திருவண்ணாமலையில், அரிசியில் வலம்புரி சங்கை வைத்தால் அனைத்தும் தங்கமாக மாறும் எனக்கூறி விற்க முயன்ற 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் பல விதங்களில் சங்கு வைத்து மோசடி செய்து வருகின்றனர். கோமாதா சங்கு என்னும் சங்கை எடுத்து மாட்டின் மடியின் கீழ் வைத்தால் தன்னால் பால் கறந்து சங்கின் உள்ளே இருக்கும் எனவும், வலம்புரி சங்கு கிடைத்துள்ளதாகவும், அந்த சங்கை வைத்திருப்பவர்கள் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்கள். சங்கின் மீது பால் ஊற்றினால் தயிராகும், அரிசியில் வைத்தால் தங்கமாகிவிடும் என்றும் பூஜை அறையில் இருந்தால் கோடீஸ்வரனாகவே இருப்பீர்கள் எனவும் கூறி இதுபோன்று பலவற்றையும் சொல்லி மோசடி கும்பல்கள் ஏமாற்றி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர்செக்கடி கிராமத்தைச் சேர்ந்த பரணி வயது (46) என்பவருக்கு தொலைபேசியில் அழைத்து ”எங்களிடம் அபூர்வமான வலம்புரி சங்கு உள்ளது. இந்த வலம்புரி சங்கு 2 கோடி ரூபாய் விலைபோகும். நாங்களும் எங்களுக்கு தெரிந்தவர்களிடம் விற்பனை செய்ய முயற்சி செய்தோம் அப்போது அவர்கள் உங்களுடைய தொலைபேசி எண் கொடுத்தார்கள் என்றும் வலம்புரி சங்கு விற்பனை செய்து கொடுத்தால் உங்களுக்கு கமிஷனாக பல லட்ச ரூபாய் தருகிறோம்” எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
மேலும் கிரிவலப்பாதையில் உங்களுக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். அவர்களின் பேச்சால் சந்தேகமடைந்த பரணி திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆய்வாளர் ஹேமமாலினி மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட காவலர்கள் சீருடையின்றி சாதாரணமான உடையில் கிரிவலப்பாதையில் காத்திருந்தனர், அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் அங்கு ஒரு கார் வந்து நின்றது.
அந்த காரில் இருந்தவர்கள் தனியாக நின்றிருந்த பரணி மற்றும் அவருடன் சென்ற காவலர்கள் உள்ளிட்டோரை அழைத்து, பின்னர் பரணி உள்ளிட்ட 2 பேரை காரில் ஏற்றிக்கொண்ட அந்த மோசடி கும்பல், வலம்புரி சங்கு எனக்கூறி ஒரு பொய்யான சங்கை காண்பித்தனர். ஆனால் அதனை பார்த்தபோது மிக சாதாரணமான தெருவில் விற்கப்படும் சங்கு என தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் காரில் வந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அதன்பிறகு அந்த மோசடி கும்பலிடம் விசாரணை நடத்தினர்,
விசாரணையில், திருவண்ணாமலை வஉசி நகரை சேர்ந்த கோவிந்த ராஜ் வயது (53) புதிய கார்கானா தெருவை சேர்ந்த தீபக் வயது (55), ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்த சதீஷ் வயது(21), வேட்டவலத்தை சேர்ந்த உமாசங்கர் வயது (38), செஞ்சி ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அரசு வயது (50). செங்கம் அடுத்த அரியாங்குப்பத்தை சேர்ந்த ராம்குமார் வயது (32), திருவண்ணாமலை பேகோபுரத்தை சேர்ந்த அஸ்வத்தாமன் வயது (28), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் வயது (41) ஆகிய 8 பேர் என்பதும் இவர்கள் வலம்புரி சங்கு எனக் கூறி சாதாரண சங்கை விலைக்கு விற்று பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த காவல்துறையினர், காரை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து இன்று அதிகாலை அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி 8 பேரிடம் விசாரணை நடத்தினார். இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து மோசடியில் ஈடுபட முயன்றதால் இவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தனர். வேறு ஏதேனும் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வலம்புரி சங்கு மோசடியில் ஈடுபட்ட 7 நபர்களை காவல்துறையினர் வேலூர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.