இரண்டாவது மனைவியின் கள்ளக்காதலனை நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட கணவன் கைது
தப்பி ஓடிய சின்னதுரை மற்றும் சத்தியமூர்த்தி, நாட்டு துப்பாக்கி கொடுத்த மணி ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்
திருவண்ணாமலை அடுத்த வேடியப்பனூர் அருகே உள்ள கொல்லக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை வயது (49), விவசாயி. இவரது முதல் மனைவி கலா, இரண்டாவது மனைவி சுதா. சுதாவிற்கும், திருவண்ணாமலை அண்ணாநகர் 7வது தெருவைச் சேர்ந்த ஹாஜி பாஷா வயது (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த சின்னதுரை, சுதாவை கண்டித்துள்ளார். ஆனால் இரண்டாவது மணைவி சுதா கள்ளக்காதலை கைவிடவில்லை என்பதால் இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பெரியபாலிபட்டு கிராமம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சுதாவும், ஹாஜி பாஷாவும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர். இதை அறிந்த சின்னதுரை மற்றும் அவருடைய நண்பர் சத்தியமூர்த்தி ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த மணி வயது (46) என்பவரிடம் நாட்டு துப்பாக்கியை வாங்கிக்கொண்டு பெரிய பாளையப்பட்டு கிராமத்திற்கு சென்றார். அப்போது அங்கு தனிமையில் இருந்த சுதாவையும், ஹாஜி பாஷாவையும் சுற்றி வளைத்தனர். இவர்களைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து ஹாஜி பாஷாவை கண்டித்துள்ளனர். இதில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த விவசாயி சின்னதுரை அவர் எடுத்து வந்த நாட்டுத் துப்பாக்கியால் ஹாஜி பாஷாவை நோக்கி சுட்டுள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த சின்னதுரை மற்றும் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனை அடுத்து படுகாயம் அடைந்து விழுந்து கிடந்த ஹாஜி பாட்ஷாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஹாஜி பாஷா திருவண்ணாமலை கிராமிய காவல் துறையிடம் புகார் செய்தார். இதன் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சின்னதுரை மற்றும் சத்தியமூர்த்தி, நாட்டு துப்பாக்கி கொடுத்த மணி ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்த நிலையில் மூவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்த பிறகு சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் வைத்து பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.