6 ஆண்டு சபதத்தை நிறைவேற்றிய காவலர் - ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை வெளுத்து வாங்கிய புகாரில் ஜெயலுக்கு சென்றார்
’’6 ஆண்டுகளுக்கு முன் தன்னை ஊரார் முன்னிலையில் தாக்கி அவமானப்படுத்திய உள்ளூர் அரசியல் பிரமுகரை பழிக்கு பழிவாங்கும் விதமாக கடத்திச்சென்று அடித்து உதைத்து விசாரணையில் அம்பலம்’’
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் செய்யாறு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் பெண்ணின் கணவர் திருமலை என்பவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் திருமலை மகாஜனம்பாக்கம்-பெரும்புலிமேடு சாலையில் தனது நண்பருடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த காவலர் ராஜாராம் உள்ளிட்ட 4 கூட்டாளிகள் கொண்ட கும்பல் திருமலையை மறித்து கத்தியை காட்டி மிரட்டி காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். அதன் பின்னர் பாண்டியன்பாக்கம் தோப்பில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கியதாக தாக்கி உள்ளனர். மேலும் திருமலையை கத்தியால் வெட்ட முயன்ற போது, சுதாரித்து கொண்ட திருமலை, அவர்களைத் தள்ளிவிட்டு தப்பியோடி சாலைக்கு வந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக சென்ற வாகனத்தில் ஏறி தூசி காவல் நிலையம் வந்து காவலர் ராஜாராம் தன்னை கடத்தி சென்று தாக்கியது குறித்து புகார் அளித்த நிலையில், ராஜாராமை போலீசார் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட காவலர் ராஜாராமிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 6 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக திருமலையை தாக்கியது தெரியவந்தது. 6 வருடங்களுக்கு முன் காவலர் ராஜாராமை, கடத்தப்பட்ட திருமலை ஊரார் மத்தியில் வைத்து அடித்து விரட்டியதாக கூறப்படுகின்றது. ஒரு காவலராக இருந்தும் கூட உள்ளூர் அரசியல் அதிகாரத்தால் தன்னை தாக்கிய திருமலையை பழிவாங்காமல் ஊருக்குள் கால எடுத்து வைக்க கூடாது என்ற சபத்துடன் இருந்துள்ளார் ராஜாராம். அதன்படி கடந்த ஆண்டு தன் சொந்த ஊருக்கு அருகில் உள்ள செய்யாறு காவல் நிலையத்துக்கு கெஞ்சி கூத்தாடி பணி இடமாறுதல் வாங்கி வந்துள்ளார்.
திருமலையின் நடவடிக்கைகளை கண்காணித்து நோட்டமிட்ட ராஜாராம், காலையில் நடைபயிற்சிக்காக பக்கத்து ஊர்வரை வந்து செல்வதை சுதாரித்துள்ளார்.இதையடுத்து தனக்கு உடல் நிலை சரியில்லை என்று ஒரு மாதம் மருத்துவ விடுப்பு எடுத்த காவலர் ராஜாராம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருமலையை காரில் கடத்திச்சென்று பாழடைந்த கட்டிடத்தில் வைத்து தர்ம அடி கொடுத்து தனது சபதத்தை நிறைவேற்றி உள்ளார். தனக்கு பயந்து திருமலை ஓடுவதை பார்த்து ரசிப்பதற்காக அவரை கொலை செய்வது போல கத்தியைக் காட்டி மிரட்டி விட்டியதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து காவலர் ராஜாராம் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் அவரை செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளைச்சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு உதவிய 4 கூட்டாளிகளை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த காவலர் ராஜாராமின் கூட்டாளிகளான விஜயவேலு, ஜெகன்ராஜ், ஜெயக்குமார், பார்த்தசாரதி, உள்ளிட்டோரையும் தூசி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடத்தல் சம்பவம் தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரனை நடைபெற்று வருகிறது.