சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!
திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞர் திருமணம் முடிந்து 5 நாட்களிலே மர்மமான முறையிலே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காசிரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் தாம்பரத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆந்திர மாநிலம் பிள்ளையார்கண்டி பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணுக்கும் கடந்த 2ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் பெரியோர்கள் முன்னிலையில் நடந்தது.
மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை:
திருமணம் முடிந்த நிலையில் புதுமாப்பிள்ளை உதயகுமார் தனது மனைவி பவித்ராவுடன் அவரது மாமனார் வீட்டிற்கு கடந்த 5ம் தேதி மறுவீடு சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த 6ம் தேதி காலையில் அங்கிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றில் புறப்பட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது, அவரிடம் அவரது மனைவி பவித்ரா எங்கே செல்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார்.
அப்போது, உதயகுமார் தான் தனது நண்பர்களை காண்பதற்காக செல்வதாக தெரிவித்துள்ளார். காலையில் சென்ற கணவன் மதியம் கடந்து மாலை ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால், அவரது மனைவி பவித்ரா போன் செய்துள்ளார். அப்போது, அவரது போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. தொடர்ந்து முயற்சித்தும் போன் சுவி்டச் ஆஃப் என்றே வந்துள்ளது. இதனால், பவித்ரா பதற்றம் அடைந்துள்ளார்.
சாலையில் கிடந்த மாப்பிள்ளை:
கணவனை தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாத மனைவி பவித்ரா தனது குடும்பத்தினரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனால், அவர்களும் பதற்றம் அடைந்துள்ளனர். பின்னர், தொடர்ந்து உதயகுமாருக்கு முயற்சித்தபோது அவரது செல்போன் ஆன் செய்யப்பட்டு ரிங் சென்றுள்ளது.
அப்போது, அவரது போனை வேறு ஒரு நபர் எடுத்துள்ளார். அவர் இந்த போனை கொண்டு வந்தவர் சாலையில் விழுந்து கிடப்பதாகவும், தனது காரில் போனை சார்ஜ் போட்டு தற்போது பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இளைஞர் மரணம்:
இதனால், பவித்ராவும் அவரது குடும்பத்தினரும் பதறியுள்ளனர். மேலும், சுயநினைவில்லாமல் இருக்கும் உதயகுமாரை ஊத்துக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பவித்ராவின் குடும்பத்தை ஊத்துக்கோட்டை மருத்துவமனைக்கு வருமாறும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், உதயகுமாருக்கு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருவள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், உதயகுமாரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
பெரும் சோகம்:
இதனால், பவித்ரா அதிர்ச்சியில் உறைந்துள்ளார். மேலும், பவித்ராவின் குடும்பத்தினரும், தகவல் அறிந்த உதயகுமாரின் குடும்பத்தினரும் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், உதயகுமாருக்கு நிகழ்ந்தது விபத்தா? உதயகுமார் யாரைச் சந்திக்கச் சென்றார்? என்ற பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 நாளிலே புது மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமும், இளம்பெண் தனது கணவனை இழந்ததும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

