தேனி : ஆன்லைன் கடன் என்ற பெயரில் ஆசை வலை.. 11 கோடி மோசடி.. புனேவை சேர்ந்த 4 பேர் கைது.
புனேயைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பபலை கைது செய்த தேனி சைபர் க்ரைம் போலீஸ். 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 10க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு மொபைல் போன், 2 கம்ப்யூட்டர் பறிமுதல்.
தேனி மாவட்டத்தில் மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(35). தேனி பெரியகுளம் சாலையில் புத்தக கடை நடத்தி வரும் இவர், கொரோனா நோய் பரவல் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் போதிய வருமானம் இன்றி இருந்ததால் நிதி சுமையை சமாளிப்பதற்கு கடன் பெற முடிவு செய்துள்ளார். அதற்கு சமூகவலைதளங்களில் கடன் வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை தேடியதில், speed loan என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துள்ளார். அதில் தனது தொழில், ஆதார், புகைப்படம் உள்ளிட்ட சுய விவரங்களை பதிவு செய்துள்ளார்.
இதை அடுத்து ராஜேஷ்குமாரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நபர், உங்களுக்கு ரூபாய் 6000 கடன் வழங்க இருப்பதாக கூறியுள்ளனர். அதற்கு சம்மதம் தெரிவித்த ராஜேஷ்குமார் தனது வங்கிக் கணக்கு விவரங்களை அளித்துள்ளார். கடந்த 2021 அக்டோபரில் ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் பிடித்தங்கள் போக 5,200 ரூபாயை ராஜேஷ்குமாரின் வங்கியில் செலுத்தியுள்ளனர். மேலும் வழங்கப்பட்ட கடன் தொகையை ஒரு வார காலத்திற்குள் திரும்ப செலுத்திவிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளனர்.
அந்த நிபந்தனையின்படி ரூபாய் 6000 கடன் தொகையை ஒரு வாரத்திற்குள் ராஜேஷ்குமார் திரும்ப செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறிது மாதம் கழித்து தொடர்பு கொண்ட ராஜேஷ்குமாரை கடன் நிறுவனத்தினர், நீங்கள் பெற்ற கடன் தொகை தங்களது வங்கிக் கணக்கில் வரவாகவில்லை எனவும், உடனடியாக மீண்டும் அந்த கடன் தொகையை செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த ராஜேஷ்குமார் தன் கடன் தொகையை ஏற்கனவே செலுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் கடன் வழங்கிய நிறுவனத்தார் கடன் தொகை தற்போது வரை தங்களது வங்கி கணக்கில் வரவில்லை, எனவே கடனை செலுத்தி விடுங்கள் இல்லை என்றால் உங்களது சுய விவரங்கள் சிபிலில் பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளனர். அதற்கு அஞ்சிய ராஜேஷ்குமார் கடந்த 2021 நவம்பர் 11-ஆம் தேதி மீண்டும் ரூபாய் ஆறாயிரத்தை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.அதன் தொடர்ச்சியாக மீண்டும் சிறிது மாதத்தில் ராஜேஷ்குமாரை தொடர்பு கொண்ட நிறுவனத்தினர், மீண்டும் நீங்கள் பெற்ற கடன் தொகை தற்போது வரை வரவில்லை. இவ்வளவு காலம் தாமதம் ஆனதற்கு கட்டணமும் சேர்த்து ரூபாய் 8400 செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கடன் தொகையை திரும்ப செலுத்தவில்லை என்றால் உங்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அதனை உங்கள் தொலைபேசியில் உள்ள கான்டாக்ட் லிஸ்டில் ஷேர் செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
அதற்கு அஞ்சிய ராஜேஷ்குமார் கடந்த 2022 பிப்ரவரி 15ஆம் தேதி மீண்டும் ரூபாய் 8400-ஐ, அவர்கள் தெரிவித்த யூபிஐ ஐடியில் செலுத்தியுள்ளார். இதன் காரணமாக விரக்தியடைந்த ராஜேஷ்குமார், தொடர்ந்து தன்னை அவர்கள் மிரட்டக்கூடாது என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணையை துவக்கிய தேனி சைபர் கிரைம் காவல்துறையினர், ராஜேஷ்குமார் செலுத்திய யூபிஐ - ஐடியை பரிசோதனை செய்ததில், அந்தக் கணக்கில் 7 வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அவற்றில் ஆறு கணக்குகள் நிறுவனத்தின் பெயரிலும், ஒரு கணக்கு மட்டும் தனிநபர் பெயரில் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தத் தனிநபரின் வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் கடந்த 2022 மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாத காலத்தில் மட்டும் ரூபாய் 11 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிப்பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். ராஜேஷ்குமார் போன்று இந்தியாவில் பல நபர்களிடம் இதுபோன்ற மோசடியில் நடைபெற்றிருக்கலாம் எனக் கருதி விசாரணையை தீவிரப்படுத்தினர்.
புலன் விசாரணையில், கண்டறியப்பட்ட தனிநபர் மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்த சாகர் அங்கூஸ் ஜோர்கி (35) எனத் தெரிந்தததும் புனேவிற்கு தேனி சைபர் க்ரைம் போலீசார் விரைந்தனர்.சம்பந்தப்பட்ட தனிநபரை விசாரணை செய்ததில் அவர் புனேயில் உள்ள ஒரு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி எனவும், கடந்த சில தினங்களுக்கு முன் புனே பகுதியை சேர்ந்த பிரபுல் ( 35) என்பவர் தனக்கு கடன் வாங்கி தருவதாக கூறி தனது ஆதார் மற்றும் புகைப்படங்களை வாங்கிக் கொண்டதாகவும் அதற்கு பின் தனக்கு ஏதும் தெரியாது எனக் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிரபுல் என்ற நபரை சுற்றி வளைத்ததில், அவருடன் மஹரந்த், ராஜேந்தர் மற்றும் தயானேஷ்வர் ஆகிய 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 10க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள், இரண்டு கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரிண்டர், ஏடிஎம் மற்றும் சிம் கார்டுகள், கடன் வழங்கும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் க்ரைம் பிரிவிற்கு அக்கும்பல் நேற்றிரவு கொண்டு வரப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில் மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் மஹரந்த், ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா காலத்தில் வேலை கிடைக்காததால் சொந்த ஊரிலேயே நாஸ்தா என்பவரின் கொரோனா கிட் சென்டர் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். சிறிது காலத்தில் உரிமையாளரின் நம்பிக்கையை பெற்ற மஹரந்த், மலேசியாவை சேர்ந்த ஜேம்ஸ் என்பவருடன் தனது உரிமையாளர் நாஸ்தா செய்து வந்த டிரேடிங் வணிகத்தையும் கவனித்து வந்துள்ளார். சில மாதங்களில் உரிமையாளர் நாஸ்தா இறந்துவிடவே, அவரது டிரேடிங் வணிகத்தை மலேசியா ஜேம்ஸ்- உடன் நேரடியாகவே செய்து வந்துள்ளார்.
சட்ட விரோதமாக செயல்படும் அந்த வணிகமானது, ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் பல லட்சம் லாபம் சம்பாதிக்கலாம் என்பதாகும். மோசடியில் வரும் பணத்தை வணிகத்தில் பயன்படுத்தி பல கோடி ரூபாய் லாபம் சம்பாதித்திருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டிருக்கக்கூடும் எனவும் சைபர் க்ரைம் காவல்துறையினர் கருதுகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேனி சைபர் க்ரைம் காவல்துறையினர், மஹரந்த், பிரபுல், ராஜேந்தர், தயானேஷ்வர் ஆகிய 4 பேரையும் கைது செய்து இன்று தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்