Crime: போடியில் 2 நாட்களில் 4 இடங்களில் தொடர் கொள்ளை சம்பவம் - பீதியில் பொதுமக்கள்
போடி தென்றல் நகரில் இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை.
போடி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் திருடர்கள் நேற்று இரவு முகமூடி அணிந்து தொடர்ச்சியாக இரண்டு வீடுகளை உடைத்து 30 பவுன் நகை எல்இடி டிவி மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரெங்கநாதபுரம் செல்லும் பகுதியில் கிருஷ்ணா நகர் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் அரசு பணியாளர்கள் , தொழில் அதிபர்கள், ஏலக்காய் வியாபாரிகள் இப்பகுதியில் அதிகம் வசித்து வருகின்றனர். கிருஷ்ணா நகர் ஆறாவது தெருவில் வசித்து வருபவர் முருகராஜ் இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது உறவினர் திருமணித்திற்காக வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த எல்இடி டிவி மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது. மேலும்இப்பகுதியில் உள்ள மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில் குடியிருந்து வருபவர் அன்னலட்சுமி இவர் கணவர் மகேஸ்வரன் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் பெண் அகிலா திருமணமாகி மங்களூரில் வசித்து வருகிறார் . இரண்டாவது பெண் தேஜா ஸ்ரீ என்பவருக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வரும் இவர் மங்களூரில் உள்ள தனது மூத்த மகள் அகிலா வளைகாப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார். அருகில் வசித்து வரும் அன்னலட்சுமி கணவருடைய தம்பி மணிகண்டன் காலை சுமார் 7 மணிக்கு தனது அண்ணன் வீட்டின் முன்பு உள்ள செடிகளுக்கு தண்ணீர் அடிக்க சென்ற பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது உள்ளே பொருள்கள் சிதறி கிடப்பதை கண்டறிந்தார். உடனடியாக போடி தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோடி துணை கண்காணிப்பாளர் பெரியசாமி சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். சம்பவம் நடந்த வீட்டில் காவல்துறையினர் ஆய்வு செய்த பொழுது கொள்ளையடிக்க வந்த நபர்கள் வீட்டின் முன்புற பூட்டை உடைத்து பின்னர் உள்ளே பக்கத்தில் உள்ள கதவை உடைத்து சென்று பீரோவை உடைத்து. சுமார் 30பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
போடி தாலுகா காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் தடயவியல் நிபுணர்கள் கொண்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிசிடிவி வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சுமார் மூன்று நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு வீடுகளிலும் ஒரே மாதிரியாக கதவுகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் நடைபெற்று உள்ளது. ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
தொடர்ச்சியாக போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடைபெறும் கொள்ளைச் சம்பவம் குறித்து பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தைசேர்ந்தவர்களா? அல்லது தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய முன் தினம் துணிக்கடையில் 1.50லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதும் இந்தத் தொடர் திருட்டு காரணமாகவும் ஆயுதங்களுடன் சுற்றிவரும் கொள்ளையர்களின் அட்டகாசத்தாலும் போடி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.