crime: பிறந்து சில நாட்களே ஆன குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை - கம்பத்தில் பரபரப்பு
பிறந்து சில நாட்களே ஆன குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததால் பரபரப்பு.
தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 23. இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி சினேகா வயது 19. இவருக்கு, கடந்த 20 நாட்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையுடன், கம்பம் கிராமசாவடி தெருவில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் சினேகா இருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் அவருடைய பாட்டி சரஸ்வதியும், சினேகா மட்டும் இருந்தனர். அவருடைய பெற்றோர் கேரளா மாநிலத்துக்கு வேலைக்கு சென்று விட்டனர்.
இந்தநிலையில் காலை 11.30 மணியளவில் வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு பாட்டி சென்ற நிலையில் வீட்டில் சினேகா தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு கழிப்பறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது தொட்டிலில் குழந்தை இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர் பதறியடித்தபடி அக்கம்பக்கத்தினரிடம் குழந்தையை காணவில்லை என்று கூறினார். இதுகுறித்து அவர்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் மதுகுமாரி, காவல் ஆய்வாளர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், குழந்தையை காணாமல் போன நேரத்தில் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். இதைத்தொடர்ந்து கம்பம் பகுதியில் உள்ள குடுகுடுப்பைக்காரர்களை பிடித்து கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர்.
ஆனால் எந்த துப்பும் கிைடக்கவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அவற்றில் குழந்தையை யாரும் எடுத்து சென்றதைப்போல் காட்சி பதிவாகவில்லை. இந்த சம்பவத்தில் போலீசாருக்கு சரியான தகவல் கிடைக்காமல் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் வீட்டில் தேடி பார்க்க போலீசார் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சினேகாவின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். வீட்டில் தேடியபோது தண்ணீர் பிடித்து வைத்திருந்த பால்கேனில் குழந்தை இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது, குழந்தை அசைவற்ற நிலையில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இதற்கிடையே குழந்தையின் தந்தை மணிகண்டன், தாய் சினேகா, பாட்டி சரஸ்வதி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை பால்கேன் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதி போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.