Crime: கோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் கைது ; நகைகள், கத்தி பறிமுதல்
அடுத்தடுத்து ஐந்து இடங்களில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்த காவல் துறையினர், இரண்டு இருசக்கர வாகனங்கள் லேப்டாப் தங்க சங்கிலிகள் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை காந்திபுரம், ஆர்.எஸ். புரம், சுந்தராபுரம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 25ஆம் தேதியன்று 5 செயின் பறிப்பு சம்பவங்கள் உட்பட ஏழு இடங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 10 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து கோவை காட்டூர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் துணையாளர் சந்தீஷ், கைது செய்யப்பட்ட இருவரும் தனிப்பட்ட செலவுகளுக்காக கொள்ளை மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், கத்தியை காண்பித்து கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருவரும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், தினேஷ் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், சாலையில் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார். அதற்காக திருட்டு வாகனங்களை பயன்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார். தற்போது இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு லேப்டாப், ஆறு சவரன் மதிப்பிலான மூன்று தங்கச் சங்கிலிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கோவையில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் நம்ம கோவை நம்ம பாதுகாப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்து வருவதாகவும், 120 கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் நவீன கண்காணிப்பு கேமராக்களை சாலைகளிலும், பொது இடங்களிலும் பொறுத்த இருப்பதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடனே பல்வேறு குற்ற சம்பவங்கள குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் கைது செய்வதற்கு 150 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த பின்னரே அவர்களது குற்றம் உறுதி செய்யப்பட்டது என்றும் சுட்டி காட்டினார். இதேபோல் திரைப்பட கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும் எனவும், திரையரங்கு உரிமையாளர்களிடம் வரும் வாரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகவும் கூறினார்.