பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை: மூதாட்டியை தாக்கி எரித்து கொன்ற பயங்கரம்
சாலைப்புதூர் சுங்கச்சாவடி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று அங்கு வைத்து மீண்டும் கடுமையாக தாக்கியதில் காந்திமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டி அருகே அடையாளம் தெரியாமல் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்த மூதாட்டி வழக்கில் திருப்பம் - பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது அம்பலம் - ஒருவர் கைது போலீசார் விசாரணை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாலைப்புதூர் சுங்கச்சாவடி அருகே கரிசல் குளம் காட்டுப்பகுதியில் கடந்த 5ந்தேதி அடையாளம் காண முடியாத படி எரிக்கப்பட்டு அழுகிய நிலையில் ஒரு மூதாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடல் அருகே தீயிட்டு எரிக்கப்பட்ட பெண்ணின் உடைகள் துண்டு துண்டாக கிடந்தது.
இதுபற்றி கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்தது சாத்தூர் படந்தால் நாச்சியப்பன் காம்பவுண்டை சேர்ந்த ராமர் என்பவர் மனைவி காந்திமதி (71) என்பவரை காணவில்லை என்பது பற்றி அவரது மகன் புகார் அளித்திருந்தது தெரியவந்தது.
அவரிடம் கயத்தாறு காட்டுப் பகுதியில் எரிக்கப்பட்ட பெண்ணின் உடல் அருகே கண்டெடுக்கப்பட்ட துண்டு துணிகளை காட்டிய பொழுது அது அவரது தாயார் காந்திமதியின் உடைகள்தான் என அவர் அடையாளம் காட்டினார்.
இதுபற்றி கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் வழிகாட்டுதலின்படி கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி மற்றும் போலீசார் விசாரணை செய்து காணாமல் போன காந்திமதி யார் யாருடன் இருந்தார் என விசாரித்தபொழுது அவர் சம்பவத்தன்று சாத்தூர் படந்தால் பகுதியைச் சேர்ந்த வேல்பாண்டி மகன் சண்முக பாண்டி (35) என்பவருடன் காரில் சென்றது தெரியவந்தது.
உடனே போலீசார் சண்முக பாண்டியனை பிடித்து தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தான் காந்திமதியை கொன்று கயத்தாறு காட்டுப் பகுதியில் எரித்தது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட காந்திமதி பணம் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். சண்முக பாண்டியன் ரூ.1.50 லட்சம் ரூபாயை காந்திமதியிடம் கொடுத்து வட்டிக்கு விடும்படி கூறியுள்ளார். சில மாதங்கள் வட்டியை சரியாக கொடுத்த காந்திமதி அதன்பிறகு கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் சண்முக பாண்டியன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பொழுது காந்திமதி கொடுக்காமல் தட்டிக்கழித்ததுடன், கொடுக்க முடியாது உன்னால் முடிந்ததை செய் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சண்முக பாண்டி தனது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு காந்திமதியை சந்தித்து இது பற்றி பேசி உள்ளார். பின்பு உங்களை உங்கள் வீட்டில் விட்டு விடுகிறேன் எனக்கூறி காரில் ஏற்றி உள்ளார். இதை நம்பி காரில் ஏறிய காந்திமதியை வழியிலேயே இரும்பு கம்பியால் சண்முக பாண்டியன் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் காந்திமதி மயக்கம் அடையவே சண்முக பாண்டியன் நேராக கயத்தாறு அருகே உள்ள சாலைப்புதூர் சுங்கச்சாவடி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று அங்கு வைத்து மீண்டும் கடுமையாக தாக்கியதில் காந்திமதி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே தான் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீயிட்டு எரித்துவிட்டு அங்கிருந்து காருடன் தப்பிச் சென்றதாக தனது வாக்குமூலத்தில் கூறினார். இந்த கொலை சம்பவம் பற்றி கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட சண்முக பாண்டியனை சிறையில் அடைத்தனர்.