Crime: திருடுவதே தொழில்..மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம்.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!
கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள கொரட்டகெரே போலீசார் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.
கர்நாடகாவில் திருடுவதற்காகவே ஒரு கும்பல் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமூகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும் என ஆளும், ஆண்ட கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குறுதி கொடுத்தாலும் அது கடுகளவு கூட குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் சொந்த தொழில் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் சிலர் திருட்டையே சொந்த தொழிலாக செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு நிறுவனமே திருட்டு தொழில் செய்ய தொடங்கி நடந்தது வந்தது தான் கர்நாடகாவின் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது.
கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள கொரட்டகெரே போலீசார் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடேஷ், ராகவேந்திரா, வினேஷ் பட்டீல் என தெரிய வந்தது. இவர்களில் வெங்கடேஷ் திருட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அங்கு ராகவேந்திரா வேலை பார்த்து வரும் நிலையில் இவர்கள் திருடும் பொருட்களை வினேஷ் பட்டீல் விற்பனை செய்து வருகிறார்.
அதாவது இருவரும் கேபிள் வயர்களை திருடி வந்துள்ளனர். இதற்காக ராகவேந்திராவுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வெங்கடேஷ் சம்பளம் கொடுத்து வந்துள்ளார். கடந்த வாரம் கொரட்டகெரே கிராமத்தில் கேபிள் வயர்கள் திருட்டு போயுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடியதில் இந்த வெங்கடேஷ், ராகவேந்திராவின் உருவங்கள் பதிவாகியது. தாங்கள் சிக்க மாட்டோம் என்ற நினைப்பில் வழக்கம்போல திருட சென்ற 2 பேரும் போலீசிடம் வசமாக சிக்கினர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் வினேஷ் பட்டீல் சிக்கினார்.
மேலும் அவர்களிடம் இருந்து கார் மற்றும் கேபிள் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக 3 பேரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கில் சம்பாதித்து உள்ளதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Crime: காதலி கண்முன்னே காதலன் வெட்டிக்கொலை - நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்