இமெயில் மூலம் 'ஆபாச சாட் '- சிவசங்கர் பாபா வழக்கு விசாரணையில் சிக்கியது முக்கிய ஆதாரம்..!
சிவசங்கர் பாபாவின் இமெயில் கணக்கில் மாணவிகளுக்கு அனுப்பிய 'ஆபாச சாட் ' சிக்கியது.
சிவசங்கர் பாபாவின் இமெயில் கணக்கில் இருந்து சில மாணவிகளுக்கு ஆபாச சாட் அனுப்பியுள்ளார். உதவியாளர்கள் மூலம் கிடைத்த சிவசங்கர் பாபாவின் இமெயில் பாஸ்வேர்டை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆபாச சாட் குறித்த கேள்விக்கு ஆமாம் என சிவசங்கர் பாபா தலையசைத்து ஒப்புக்கொண்டதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அது சுஷில் ஹரி பள்ளியின் யாஹு இமெயில் என்றும், அதனைத்தான் சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக ஆபாச சாட்டுக்கு பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் சிவசங்கர் பாபா, செல்போனை பயன்படுத்தாமல் இமெயில் மூலமே பேசுவார் என்றும் தகவல் வெளியானது. அதனடிப்படையில் நடந்த விசாரணையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
முன்னதாக, சிவசங்கர் பாபாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 8 நாட்கள் நீதிமன்றக்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால் 3 நாட்கள் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி ஜூன் 28,29, மற்றும் 30 ஆகிய தினங்கள் சிவசங்கர் பாபாவின் விசாரணை நாள்களாக குறிப்பிடப்பட்டது. முதல்நாளான ஜூன் 28-இல் எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் நாள் விசாரணையில் அழுது புலம்பிய சிவசங்கர் பாபா தன் மீது குற்றமில்லை என கூறியுள்ளார். அந்த விசாரணையில் அவர் பள்ளியில் உள்ள சொகுசு அறை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
முன்னதாக, பள்ளி மாணவிகள் 5 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் , சிவசங்கர் பாபா தனது LOUNGE என்ற சொகுசு அறையில் வைத்து தான் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்திருந்தனர். இதனையடுத்து நேற்றைய விசாரணை சுஷில் ஹரி பள்ளியிலேயே நடத்தப்பட்டது. இதற்காக சிவசங்கர் பாபா பள்ளிக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு பாபாவிடம் துருவித்துருவி கேள்வி கேட்கப்பட்டது. ஆபாச மெசேஜ்கள் அனுப்பியது, மாணவிகளுடன் நெருக்கமான புகைப்படங்களை வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மாணவிகளுக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா? ஆசிரியர்கள் வேறு யாராவது உதவி செய்தார்களா? உள்ளிட்ட பல கேள்விகள் சிவசங்கர் பாபாவிடம் கேட்கப்பட்டது.மேலும் சிவசங்கர் பாபா பயன்படுத்திய கணினி, லேப்டாப், மொபைல் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்றது.
மேலும் கணினியை பயன்படுத்த தூண்டுதலாக இருந்த கணினி ஆசிரியர்கள் இருவரை கைது செய்து விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இன்றுடன் மூன்றாவது நாள் விசாரணை முடிவடைய உள்ள நிலையில் இன்று (புதன்) மாலைக்குள் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது விசாரணையில் கைப்பற்ற ஆதாரங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும். பின்னர் இன்று மாலை சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்படுவார்.