2வது திருமணம் செய்வதாக இளம்பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி: விழிப்புணர்வோடு இருங்க மக்களே
ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம்.
தஞ்சாவூர்: இரண்டாவது திருமணம் செய்வதாக கூறி தஞ்சையை சேர்ந்த பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
இரண்டாவது திருமணம் செய்ய பதிவு
தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த வயது 27 இளம்பெண். இவர் திருமணமாகி கணவரை பிரிந்துவிட்ட நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் இரண்டாவது திருமணம் செய்வதற்காக வரன் தேடிய அவர் ஆன்லைனில் தனது சுய விவரங்களை பதிவு செய்திருந்தார்.
ஆசை வார்த்தை கூறினார்
இந்நிலையில் இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு கடந்த மாதம் மர்மநபர் ஒருவர் தான் லண்டனில் பல் டாக்டராக வேலை செய்கிறேன் என்றும், தங்களது புகைப்படம் மற்றும் சுய விவரங்களை ஆன்லைனில் பார்த்ததாகவும் கூறினார். இதனால் அந்த பெண்ணிடம் நான் உங்களை விரும்புவதாக கூறியதுடன், 2-வது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணும் திருமணத்திற்கு சம்மதிக்க இருவரும் செல்போனில் உரையாடி நெருங்கி பழகினர். அப்போது அந்த மர்மநபர் பெண்ணிடம் நான் இந்தியா வருவதாக உள்ளதால் என்னுடைய உடைமைகளை உங்கள் வீட்டு முகவரிக்கு பார்சல் அனுப்பியுள்ளதாக கூறினார்.
வரி செலுத்த வேண்டும் என்று போலி தகவல்
இதனையடுத்து போலியான பார்சல் சேவையில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்ட மற்றொரு மர்மநபர், அந்த பெண்ணிடம் வெளிநாட்டில் இருந்து உங்களது பெயரில் வந்த பார்சலில் ஏராளமான தங்க நகைகள் இருப்பதாகவும், அதற்கு அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும் என கூறி உள்ளார்.
பல தவணைகளாக ரூ.8 லட்சம் அனுப்பினார்
இதனை உண்மை என நம்பிய அந்த பெண், வரி செலுத்துவது குறித்து திருமணம் செய்வதாக சொல்லிய நபரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் நீங்கள் வரியை செலுத்துங்கள். நான் இந்தியா வந்த உடன் பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண் ரூ.40 ஆயிரம் மற்றும் ரூ.2 லட்சம் என பல்வேறு தவணைகளாக ரூ.8 லட்சத்து 26 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் பார்சல் சேவைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்
இதனையடுத்து திருமணம் செய்வதாக கூறிய நபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரது செல்போனுக்கு இணைப்பு நீண்ட நாட்களாக கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பார்சல் சேவையில் இருந்த பேசிய மர்மநபரை தொடர்பு கொண்ட போது அவருடைய செல்போனும் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் அந்த பெண் தனக்கு மோசடி நடந்ததை உணர்ந்தார். இதனால், அந்த பெண் இது குறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விழிப்புணர்வோடு இருங்கள்... சைபர் க்ரைம் போலீசார் அட்வைஸ்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் கூறுகையில், “ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர்” என தெரிவித்தனர்.