குற்றவழக்குகளில் தஞ்சை போலீஸ் காட்டிய அதிரடி... குறைந்த சாலை விபத்துக்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024 ம் ஆண்டில் - சாலை விபத்து வழக்குகள் கடந்த ஆண்டை விட வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட காவல்துறையினர் காட்டிய அதிரடியில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறித்த பார்க்கலாம்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொலை வழக்குகளில் இரும்பு பிடி
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்கள், ரவுடிகள் என 2024 -ம் ஆண்டில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் தொடர்ந்து குந்தகம் விளைவித்த 109 நபர்கள் கண்டறியபட்டு அவர்கள் மீது சரித்திர பதிவேடு புதிதாக துவங்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2024ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில், ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு 438 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் அதில் தொடர்புடைய 422 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்த 77 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 543 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கோட்டாட்சியர் முன்னிலையில் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 2024ம் ஆண்டில் நடந்த 50 கொலை வழக்குகளில் தொடர்புடைய 133 குற்றவாளிகள் உடன் கைது செய்துப்பட்டு தக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு அவ்வழக்குகளில் புலன்விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு 47 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையானது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சைபர் க்ரைம் வழக்குகள் மீதான நடவடிக்கை
தஞ்சாவூர் மாவட்டத்தில் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில், 2024 -ம் ஆண்டு 60 இணையவழி குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விரைவான நடவடிக்கை மூலமாக, 3 வெளி மாநில குற்றவாளிகள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
2024 -ம் ஆண்டில் 60 இணையவழி குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு 3 வெளிமாநில குற்றவாளிகள் உட்பட 24 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபட்டனர். இணையவழி குற்றங்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு 838 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
இணையவழி பணமோசடி தொடர்பான புகார்களில் துரிதமாக செயல்பட்டு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மோசடி நபர்களின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.5,69,68,282 தொகையானது முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.83,09,684 தொகையானது நீதிமன்றம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆண்டில் காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக இணையம் மூலமாக பெறப்பட்ட 3,433 புகார்களில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை மூலமாக 2,417 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றுள் 860 செல்போன்கள் அதன் உரிமையாளரிடம் மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டை விட குறைந்த சாலை விபத்துகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024 ம் ஆண்டில் - சாலை விபத்து வழக்குகள் கடந்த ஆண்டை விட வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 -ம் ஆண்டு 2,323 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2024ம் ஆண்டு 2,273 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 2023 -ம் ஆண்டு 589 சாலை விபத்து வழக்குகளில் 609 நபர்கள் இறந்துள்ளனர். 2024 ம் ஆண்டு 534 சாலை விபத்து வழக்குகளில் 558 நபர்கள் இறந்துள்ளனர். அதிகமாக சாலை விபத்து நிகழும் நிகழ்விடங்கள் கண்டறியப்பட்டு தடுப்பு அரண்கள் அமைத்தும், சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்தும் பல்வேறு இடங்களில் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் அமைத்தும், சாலை விபத்தில் மரணம் அடையும் வழக்குகள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சாலை போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக 2024 -ம் ஆண்டில், மோட்டார் வாகன சட்டப்படி 3,96,144 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 2,648 வழக்குகளும், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது 2,41,422 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள், அதிவேகமாக அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுபவர்கள், சாலை விபத்துகளை ஏற்படுத்தியர்களின் 1,884 நபர்களின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து மற்றும் இடை நிறுத்தம் செய்ய காவல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்குகளில் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-ம் ஆண்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுப்பட்ட நபர்கள் மீது 241 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 368 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 1,030 கிலோ கஞ்சா, 785 கிராம் டைசிபம் பவுடர், 130 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 7 இருசக்கரவாகனங்கள் மற்றும் 8 நான்கு சக்கரவாகனங்கள் என மொத்தம் 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 20 நபர்கள் அடையாளம் காணப்பட்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்புடைய குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் சீரிய முறையில் விசாரணை நடைபெற்று 32 வழக்குகளில் தொடர்புடைய 42 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்று தரப்பட்டுள்ளது.