தஞ்சை அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக் கொலை - 2 பேர் கைது
கடந்த தீபாவளி பண்டிகை அன்று ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது இருவர் மத்தியிலும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை அடுத்த கூடலூரை சேர்ந்தவர் மங்களதுரை. இவருடைய மகன் ஆர்யா (19). ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் மகன் கவியரசன் (22), முருகானந்தம் மகன் அழகேசன் (19). இவர்கள் வெவ்வேறு பகுதியை சேர்ந்தவர்கள். இருப்பினும் கவியரசனின் அம்மா பிறந்த ஊர் வீடு கூடலூர் உள்ளது. அங்குள்ள தனது பாட்டியை பார்க்க கவியரசன் அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது ஆர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கவியரசனும், ஆர்யாவும் கடந்த தீபாவளி பண்டிகை அன்று ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது இருவர் மத்தியிலும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது பீர் பாட்டிலால் கவியரசன் தலையில் ஆர்யா தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இருதரப்பினருக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை செய்யப்பட்டு சமாதானம் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சையை அடுத்த வீரமரசன்பேட்டை கிராமத்தில் திருவிழா நடந்துள்ளது. இந்த திருவிழாவை பார்க்க கவியரசன் வந்துள்ளார். இதே திருவிழாவிற்கு ஆர்யாவும் வந்துள்ளனார். அப்போது 2 பேரும் சந்தித்துள்ளனர். சகஜமாக பேசிக் கொண்டு இருந்தபோது கடந்த தீபாவளி பண்டிகை அன்று நடந்த சம்பவத்தை ஆர்யா ஞாபகப்படுத்தி உள்ளார். இதனால் ஆர்யா மீது கவியரசனுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத கவியரசன், ஆர்யாவுடன் திருவிழாவை ரசித்து பார்த்துள்ளார். பின்னர் மது அருந்தலாம் என்று ஆர்யாவை பைக்கில் அழைத்துக்கொண்டு வயலூர் பகுதியில் உள்ள ஒரு வயல்காட்டிற்கு சென்றுள்ளார் கவியரசன். அங்கு இருவரும் மது அருந்தி உள்ளனர். முன்னதாக கவியரசன் தனது நண்பர் அழகேசனை செல்போனில் தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்து கத்தி எடுத்து வருமாறு அழைத்துள்ளார்.
அதன்பேரில் அவரும் அங்கு வந்தார். அப்போது தீபாவளி அன்று நடந்த சம்பவத்தை திரும்பவும் கூறி தன்னை அவமானப்படுத்தியதால் கவியரசனும், அழகசேனும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக ஆர்யாவை வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஆர்யா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கவியரசன், அழகேசன் ஆகிய 2 பேரையும் போலீசர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.