Crime: கள்ளச்சாராயம் குறித்து துப்புக் கொடுத்த கொத்தனார் வெட்டிக் கொலை - தஞ்சையில் பயங்கரம்
கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்த கொத்தனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்: கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்த கொத்தனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (32). கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
இந்நிலையில், தனபால் நேற்றுமுன்தினம் இரவு நரசிங்கம்பேட்டை கடைத்தெரு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, டூ வீலரில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், தனபாலை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த தனபாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே தனபால் உயிரிழந்தார். தகவலறிந்த திருநீலக்குடி போலீசார் தனபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருநீலக்குடி போலீசார், தனபாலை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தனபாலின் உறவினர்கள், தனபால் உடல் வைக்கப்பட்டுள்ள கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு திரண்டனர். கள்ளச்சாராயம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் தான் தனபால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை வெட்டிய சாராய வியாபாரியை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர், மேலும் தனபால் உடலை வாங்க மாட்டோம் என்று கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சாலைமறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கும்பகோணம் டி.எஸ்.பி., மகேஷ் குமார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட தனபாலின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், உடலை வாங்கி சென்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி வரும் நிலையில் கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் கொடுத்தவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மக்கள் தரப்பில் கூறுகையில், கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் கொடுங்கள். ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. ஆனால் தகவல் கொடுக்கப்பட்டவர் பற்றி எப்படி தெரிந்தது. அவ்வாறு தெரிந்ததால்தானே தனபால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தெரிந்தாலும் இனி மக்கள் தகவல் தர ச்சப்படும் நிலையையே உருவாக்கி உள்ளது என்று தெரிவித்தனர்.