Crime: தென்காசி அருகே காவலாளியை வெட்டிக்கொன்று இளைஞர் தப்பியோட்டம்
கடையநல்லூர் அருகே காவலாளி ஒருவர் இளைஞரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது தோட்டம் மாவடிகால் என்ற பகுதியில் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சாமி(55) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இங்கு ஆடு, மாடு, கோழி பண்ணைகளும் உள்ளது. அங்குள்ள பண்ணையில் அகரகட்டு கிராமத்தை சேர்ந்த ஜோசப் அவரது மனைவி லெல்லி ஆகிய இருவரும் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இச்சூழலில் இவர்களது மகன் பெஞ்சமீன் (24) என்ற இளைஞர் தினந்தோறும் தாய், தந்தையரை பார்க்க தோட்டத்திற்கு வந்து செல்வது வழக்கம். இந்த சூழலில் நேற்று மாலையும் பெஞ்சமீன் வழக்கம் போல் தோட்டத்திற்கு வந்துள்ளார்.
அப்போது தோட்டத்தில் இருந்த காவலாளி சாமிக்கும், ஜோசப்பிற்குமிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை பார்த்துக்கொண்டிருந்த மகன் பெஞ்சமின் ஆத்திரத்தில் அரிவாளால் சாமியை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த சாமி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கடையநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது இரத்த வெள்ளத்தில் சாமி பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார். மேலும் அரிவாளால் வெட்டிய பெஞ்சமின் தப்பி ஓடியுள்ளார். உடனடியாக சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலையில் ஈடுபட்டு தப்பியோடிய இளைஞர் பெஞ்சமினை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சாமி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் சாமியின் உறவினர்கள் மருத்துவமனை அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக செல்லும் பேருந்துகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து சாமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். கடையநல்லூர் அருகே காவலாளி ஒருவர் இளைஞரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்