தென்காசி: நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேர் மீது நடவடிக்கை..!
”வன உயிரினங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம், அவ்வாறு வன உயிரினங்களை வேட்டையாடுபவர்கள் குறித்து சிவகிரி வனச்சரக அலுவலகத்திற்கு 04636-298523 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்”
தென்காசி அருகே சிவகிரி வனச்சரக எல்லைக்குட்பட்ட ஒப்பனையாள்புரம் கிராமத்திற்கு அருகே வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின்படி நெல்லை மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவுப்படி தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரக அலுவலர் மௌனிகா தலைமையில் சிவகிரி தெற்கு பிரிவு வானவர் சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சிவகிரி வனச்சரக எல்கைக்குட்பட்ட ஒப்பனையாள்புரம், கிராமத்திற்கு அருகில் உள்ள பெரியகுளம் கண்மாய் பகுதியில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு நாட்டு வெடிகுண்டுகள் மூலம் வன விலங்குகள் வேட்டையாடப்பட்டது தெரிய வந்தது. குறிப்பாக காட்டுப்பன்றிகளை வேட்டையாடியது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் சிவகிரி சங்குபுரம் இந்திரா காலனி சார்ந்த மாடன் என்பவரது மகன் கடற்கரை, சங்கரன்கோவில் ஒப்பனியாபுரம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த வீரன் மகன் பால்துரை, கடையநல்லூர் புளியங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சின்ன இசக்கி என்பவரது மகன் பெரிய முருகன், ஆகிய மூன்று பேரும் நாட்டு வெடிகுண்டுகள் வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்கள் 3 நபர்களையும் பிடித்து விசாரணை செய்ததில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியதும், அதே போல மான் கொம்புகள் வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அதன்படி அவர்களிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு சிவகிரி வனச்சரகத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் பதுக்கி வைத்திருந்த மான் கொம்பு உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர், அதோடு விசாரணையில் குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டதால் மாவட்ட வன அலுவலர் மற்றும் வனக்காப்பாளர் முருகன் உத்தரவின் படி தலா ஒரு நபருக்கு 50 ஆயிரம் வீதம் மூன்று நபர்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வன உயிரினங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்றும் அவ்வாறு வன உயிரினங்களை வேட்டையாடுபவர்கள் குறித்து சிவகிரி வனச்சரக அலுவலகத்திற்கு 04636-298523 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுப்பன்றி மற்றும் மான் கொம்புகளை வேட்டையாடியதாக 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.