"கல்யாணத்துக்கு கட்டாயம்.. மாரடைப்புன்னு பொய் சொன்னேன்” : திருமணமான 36 நாட்களில் கணவரைக் கொன்ற பெண் கைது
தெலங்கானா மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் இணைந்து தன் கணவனைக் கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் இணைந்து தன் கணவனைக் கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஷியாமளாவுக்கு கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணமான 36வது நாளில் அப்பெண்ணின் கணவர் சந்திரசேகர் (24) மர்மமான முறையில் இறந்தார். கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. நெஞ்சுவலி என்று சொன்னவர் இறந்துவிட்டார் என்று கண்ணீர் மல்கக் கூறி அனைவரையும் நம்பவைத்துள்ளார்.
ஆனால் நல்ல ஆரோக்கியமான உடல்நிலை கொண்ட 24 வயது இளைஞருக்கு எப்படி மாரடைப்பு ஏற்பட்டது என்று அந்தப் பெண் மீது போலீஸாருக்கு லேசான சந்தேகம் இருந்துள்ளது. அப்பெண்ணின் கணவர் ஏப்ரல் 28-ல் இறந்தார். சில நாட்கள் பெண்ணை போலீஸார் நோட்டம்விட்டுள்ளனர். அவரது நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிந்துள்ளது. கணவரை இழந்த வாட்டம் அவரிடம் இல்லை.
ஷியாமளாவின் மாமியாரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். அவரும் தனக்கு சந்தேகம் இருப்பதாகவே கூறியுள்ளார். மகனின் மர்ம சாவு குறித்து விசாரிக்குமாறு அவர் புகார் கொடுத்தார். இதனையடுத்து ஷியாமளாவை போலீஸார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
ஷியாமளாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அப்பெண் உண்மையை ஒப்புக்கொண்டார். ”எனக்கு சித்திபேட்டைச் சேர்ந்த சிவா என்பவருக்கும் காதல் இருந்தது” எனக் கூறினார். ஆனால் வீட்டாரின் வற்புறுத்தலால் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டதாக ஷியாமளா கூறியுள்ளார். மேலும் திருமணம் ஆனதிலிருந்தே சந்திரசேகரை கொலை செய்துவிட வேண்டும் என்று அவர் பல முறை முயன்றதாக போலீஸிடம் தெரிவித்தார். ஒருமுறை விஷம் கொடுக்க முயன்றும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக அப்பெண் கூறினார். இந்த நிலையில் சிவா மற்றும் அவரது நண்பர்கள் 4 பேருடன் இணைந்து கொலை திட்டம் தீட்டியுள்ளார் ஷியாமளா. ஏப்ரல் 28, 2002 சம்பவத்தன்று ஷியாமளா, சிவா அவரது நண்பர்கள் 4 பேர் இணைந்து சந்திரசேகரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். “கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தினார்கள், அவர் மாரடைப்பு வந்து இறந்ததாக நடித்தேன்” என்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.
ஷியாமளாவின் வாக்குமூலம் போலீஸாருக்கு அதிர்ச்சியை அளித்தது. அந்தப் பெண்ணையும் கொலைக்கு உடந்தையாக இருந்த சித்திபேட் சிவா உள்ளிட்ட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அண்மையில் தமிழகத்தில் கூட இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது. நிச்சயம் முடிக்கப்பட்ட பையனை இளம் பெண் கொலை செய்தார். இதுவும் ஒருவித மனநோய் தான். ஆகையால், இழப்பை தாங்க முடியாத கொலை வெறி வந்தால் மனநல மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது என்று நிபுணர்கள் தரப்பில் ஆலோசனை கூறப்பட்டது.