Operation Ganja : ஏழே மாதம்.. ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துகள்..கஞ்சா வியாபாரிகளின் சொத்துகளை முடக்கிய போலீஸ்!
தமிழ்நாடு முழுவதும் கடந்த 7 மாதங்களில் கஞ்சா வியாபாரிகளிடம் 50 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, ஹெராயின், கொகைன் போன்ற போதை பொருட்களை தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரி காவல்துறையினர் கடந்த மார்ச் மாதம் முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கிட்டதட்ட 7 மாதங்களில் கஞ்சா வியாபாரிகளிடம் 50 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள். அதன்படி, 28.03.2021 முதல் தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடந்துவருகிறது.
கடந்த 7 நாட்களில், 232 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 332 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கிகணக்குகள் முடக்கப்பட்டது.
இது வரை கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் முடக்கம் பட்டு 50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 460 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு. 1006 இரண்டு மற்றும் நாண்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகரில், காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், ஒரு நாள் சிறப்பு சோதனை மேற்கொண்டு போதை பொருட்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட 298 குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு, 39 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டது. #chennaipolice #greaterchennaipolice #shankarjiwalips #pocso pic.twitter.com/4KgHtBplDS
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) October 5, 2022
இனிவரும் காலங்களில், தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர், இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும்முடக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.