உயிரை உறிஞ்சிய டிரேடிங் ஆப்..! 7 லட்சம் நஷ்டமாம்! கல்லூரி மாணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஆன்லைன் டிரேடிங் மூலம் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார்
ஆன்லைன் டிரேடிங் மூலம் 7 லட்சம் வரை பணத்தை இழந்த ஆந்திராவை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை
ஆன்லைன் டிரேடிங் ஆப்ஸ்
கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் டிரேடிங் ஆப்கள் அதிகமாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. இது போன்ற ஆன்லைன் டிரைவிங் ஆப்களில் பணத்தை முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என விளம்பரங்கள் செய்து முதலீடுகளை பெறுகின்றனர். அதில் முன் அனுபவம் இருப்பவர்கள், அதை அது குறித்து நன்றாக அறிந்தவர்கள் மட்டுமே பெரிய அளவில் லாபத்தை பெற முடியும். ஆனால் அது குறித்து தெரியாதவர்கள் விளம்பரங்களை பார்த்து ஏமாறுவதும், ஆயிரங்களில் துவங்கும் இந்த டிரேடிங் லட்சங்களில் நடைபெறுவதும் சில நேரங்களில் அதில் மாணவர்கள், இளைஞர்கள் சிக்கிக் கொள்வதும் அதிகரித்து வருகிறது.
மாணவர் தற்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள சவிதா பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராமையா புகலா (21) என்ற மாணவர் EEE மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அறை எண் 311ல் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து தங்கி உள்ளதாகவும், இரவு சுமார் 11:30 மணி வரை அறையில் இருந்த நபர் காலை சுமார் 05.00 மணியளவில் பார்த்தபோது, காணவில்லை.
இதனை அடுத்து நண்பர்கள் அருகில் இருந்த அறையை தேடிப் பார்த்தபோது புதுபிக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அறை எண் 313 இல் , கதவு தாழிடப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்பொழுது மஞ்சள் நிற மின்சார ஒயரால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அவரது நண்பர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ஆன்லைன் டிரேடிங் காரணமா
தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் ராமையா செல்போன் ஆப் மூலம் ஆன்லைன் டிரேடிங் செய்து வருவதாகவும், நேற்று இரவு மட்டும் அறையில் இருக்கும் நண்பர்களிடம் மூன்று லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். அவ்வப்போது இதுபோன்று கடனாக பெறுவதும் திருப்பித் தருவதும் வழக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் நேற்று இணைய வழி ஆப் மூலம் சுமார் ஏழு லட்சம் வரை பணத்தை இழந்துள்ளதாகவும் சிறிது நேரம் கழித்து தான் ஏமாந்தது குறித்து அறிந்துள்ளார். இதனால் மனமுடைந்து போன ராமையா இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவர் ஆன்லைன் டிரேடிங் மூலம் பணத்தை இழந்து கல்லூரி விடுதியில் தூக்கிட்டு இறந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)