பெண்ணின் வயிற்றில் 12 ஆண்டுகளாக இருந்த கத்தரிக்கோல்.. ரூ10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
பாதிப்புக்குள்ளான பெண் குபேந்திரிக்கு பிரசவ அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் அஜாக்கிரதையாக நடந்து கொண்டது நிரூபணமாகி உள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக சென்றபோது வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்ததில் 12 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிரசவத்துக்குப் பின் 12 ஆண்டுகள் வயிற்றுவலி
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் தனியார் நிறுவனத்தின் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் பாலாஜி. இவரது மனைவி குபேந்திரி. கடந்த 2008ஆம் ஆண்டு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த குபேந்திரி குழந்தைப்பேறுக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து 12 ஆண்டுகள் குபேந்திரி கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி
இந்நிலையில், முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்த போது அவரது வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்திரிகோல் வைத்து தைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அப்பெண்ணின் வயிற்றில் இருந்து கத்தரிக்கோல் அகற்றப்பட்டது.
முதலமைச்சரிடம் புகார் மனு
இதையடுத்து தனது மனைவியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்து அஜாக்கிரதையாக செயல்பட்ட மருந்துவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, பாலாஜி தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இ மெயில் மூலம் புகார் அனுப்பினார்.
இந்தத் தகவல் செய்தியாக வெளியான நிலையில், முன்னதாக இப்புகாரை தாமாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்தது. மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
இந்நிலையில், முன்னதாக திருவள்ளூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் அளித்த அறிக்கையின்படி, பாதிப்புக்குள்ளான பெண் குபேந்திரிக்கு பிரசவ அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் அஜாக்கிரதையாக நடந்து கொண்டது நிரூபணமாகி உள்ளதாக துரை செயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சையை எச்சரிக்கையாக செய்திருந்தால் குபேந்திரி வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தத்திருக்க மாட்டார்கள் எனவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அந்தப் பணத்தை சம்மபந்தப்பட்ட மருத்துவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்