பள்ளிகளில் தொடரும் பாலியல் தொல்லைகள்.. 1ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை..பொங்கிய மக்கள்
சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தபோது, பாலியல் தொல்லைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தனியார் பள்ளியில் 6 வயது மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம், பெற்றோர், உறவினர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரம் அடைந்த உறவினர்கள், பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புதுச்சேரி - கடலூர் சாலையில் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவங்களைக் கேட்டிருக்கிறோம். அந்த கொடூரங்கள் எல்லாம், பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களாலோ, அக்கம்பக்கத்தாராலோ அல்லது நண்பர்களாலோ நிகழ்த்தப்பட்டிருக்கும். ஆனால் கடந்த ஒருவாரமாக காதில் விழும் செய்தி அப்படியில்லை. வேலியே பயிரை மேய்வதுபோல, வகுப்புகளிலும் பள்ளி வளாகங்களிலும், கல்லூரிகளிலும் பட்டப்பகலிலேயே ஆசிரியர்கள் சிலர் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தி உள்ளனர்.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்க்கும் ஆசிரியர் மணிகண்டன், 6 வயதான மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பெற்றோர் பரிசோதித்தபோது, பாலியல் தொல்லைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று நியாயம் கேட்டனர். தகவல் அறிந்த பொதுமக்கள், மாணவியின் உறவினர்கள், நேற்று பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். பள்ளிக்கு வெளியே, தவளங்குப்பம் சந்திப்பில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் கடலுார் சாலையில் 5 கிலோமீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் ஸ்தம்பித்தன. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தற்போது மாவட்ட ஆட்சியர், சிறுமியின் பெற்றோரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பள்ளிய மூடுவதாகவும், பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்ற சம்பவங்கள்:-
சம்பவம் 1: கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில், 8ஆம் வகுப்பு மாணவி ஜனவரி 3ஆம் தேதி அன்று அங்கு பணியாற்றிய சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் என்னும் காமக் கொடூரன்களால் அங்கிருந்த கழிப்பறையில் வைத்து வேட்டையாடப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குற்றம் செய்த மூவரும் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, புதிதாக பணியிட மாற்றம் செய்த 4 பெண் ஆசிரியர்கள் பணியில் இணைந்தனர். ஆனாலும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் தயாராய் இல்லை.
சம்பவம் 2: சேலம்
கிருஷ்ணகிரி, சேலம், சேலம், ஓமலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் அளித்த புகாரை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் 3: மணப்பாறை
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 4ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியரும் சரண் அடைந்துள்ளார்.
சிவகங்கை, திருச்சி விழுப்புரம், புதுச்சேரி என குற்றப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

