உயிருடன் இருக்கும் கணவர்.. மனைவி செய்த தில்லாலங்கடி வேலை - வசமா சிக்கியது எப்படி?
கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கணவர்தான் எனக்கூறி இறப்பு சான்றிதழ் பெற்றது அம்பலம்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ரேவதி. இவர், கடந்த 24.10.2024ம் தேதி இடைப்பாடி காவல்நிலையத்தில் தனது கணவர் விஜயகுமாரை காணவில்லை என புகார் தெரிவித்தார். இதன் பேரில், போலீசார் காணவில்லை என வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் கடந்த 2.11.2024ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பவானி காவல்நிலையத்தில் சென்று ரேவதி, அடையாளம் தெரியாத நபர் புகைப்படத்தில் இருப்பது தனது கணவர் விஜயகுமார் என தெரிவித்தார். அதன் பேரில், பவானி போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு, அடையாளம் தெரியாத சடலத்தின் பிரேத பரிசோதனை சான்றினை வழங்கியுள்ளனர்.
இந்த பிரேத பரிசோதனை சான்றிதழை வைத்து ரேவதி இறப்பு சான்று பெற்றுள்ளார். தொடர்ந்து இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில், வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பரவேஸ் சுபையர் விசாரித்ததில், இறப்பு சான்றிதழ் பெறப்பட்ட விஜயகுமார் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று மாலை இடைப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு விஜயகுமார் மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகிய இருவரையும் நேரில் வரவழைத்து தாசில்தார் வைத்தியலிங்கம் விசாரணை நடத்தினார்.
மேலும், கணவன் உயிருடன் இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் பெற்று அதனை வைத்து வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து நூதன மோசடியில் ஈடுபட்ட ரேவதி மீது இடைப்பாடி போலீசில் விஏஓ புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து ரேவதியை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், விஜயகுமார் - ரேவதி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மலேசியாவில் பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். மேலும், பல்வேறு இடங்களில் கடன் வாங்கி செலவு செய்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்த விஜயகுமார் கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டார். இதனைத்தொடர்ந்து அவரை காணவில்லை என ரேவதி கொடுத்த புகாரின் பேரில், விசாரித்து வந்த நிலையில், பவானி பகுதியில் சடலமாக கிடந்தது தனது கணவன் தான் என தெரிவித்து சான்றிதழ் வாங்கியுள்ளார். விஜயகுமாருக்கு சொந்தமான சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றும் வகையில், அவர் உயிரோடு இருக்கும்போதே இறந்து விட்டதாக சித்தரித்து யாருக்கும் தெரியாமல் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். இதன்பேரில், வருவாய்த்துறையினர் நேரில் சென்று விசாரித்தபோது தான் விஜயகுமார் உயிரோடு இருப்பது தெரியவந்தது. வாரிசு சான்று கேட்டு ரேவதி விண்ணபித்தது குறித்து விஜயகுமாருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை நேரில் அழைத்து விசாரித்ததில் ரேவதியின் திட்டம் அம்பலமானது. இதன் பேரில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

