சேலத்தில் பயங்கரம்.. மளிகை கடை நடத்தி வந்த தம்பதி கொடூர கொலை
சேலம் அருகே மளிகை கடை நடத்தி வந்த தம்பதியை கொலை செய்து 18 பவுன் நகை திருடி சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள எட்டிகுட்டை தெருவில் பாஸ்கரன்(65) வித்யா(60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவரும் வீட்டின் முன்பகுதியில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல இன்றும் கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பாஸ்கரன் மதிய உணவுக்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் கடைக்கு திரும்பாததால் கடைக்கு வந்தவர்கள் சந்தேகமடைந்து வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது பாஸ்கரன் மற்றும் வித்யா இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் நிகழ்விடத்திலேயே வித்யா துடித்துடித்து உயிரிழந்தார். படுகாயமடைந்த பாஸ்கரன் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தொடர்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் இருவரையும் கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இருவரும் கழுத்தில் அணிந்திருந்த 18 பவுன் தங்க நகைகள் காணவில்லை என உறவினர்கள் கூறியதால் நகைக்காக இந்த கொலை அரங்கேறியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு கொலையாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் மது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைப்பதால் இது போன்ற நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சூரமங்கலம் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கணவன் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















