ஜாக்கெட் அணிந்து பார்க்கச் சென்ற தோழி: நகையை திருடியது அம்பலம் - ‘நட்பே நாடகமாடினால்’ யாரை நம்பி பழகுவது..?
நகைகளை திருடி ராமநாதபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரூ.7 லட்சத்திற்கு விற்று பணத்தை செலவு செய்து வந்ததாகவும் கூறினார்.
ஜாக்கெட்டை அணிந்து பார்ப்பதாக பீரோ லாக்கர் இருந்த அறைக்கு சென்று நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்த தோழியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நகைக்கடையில் ரூ.7 லட்சத்திற்கு நகைகளை விற்று செலவிட்டது தெரியவந்தது. நடித்து ஏமாற்றிய தோழியை கேணிக்கரை போலீசார் கைது செய்து விற்பனை செய்த நகைகளை மீட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் தோழி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற கல்லூரி மாணவி ரூ.10 லட்சம் நகைகளை திருடியதாக சிக்கி உள்ளார். ஜாக்கெட் அணிந்து பார்ப்பதாக கூறி, பீரோவில் நகையை திருடிய மாணவி சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
ராமநாதபுரம் அருகே கழுகூரணியைச் சேர்ந்த பைரஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிர்தவுஸ் பானு. இவருக்கு 43 வயது ஆகிறது. பிர்தவுஸ் பானு வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில் தையல் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் தனது வீட்டு பீரோ லாக்கரில் வைத்திருந்த தனது தங்க வளையல்கள், நெக்லஸ், தங்க செயின், கைச்செயின், மோதிரம் என சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 19 பவுன் தங்க நகைகள் திடீரென்று மாயமானதை கண்டு பிர்தவுஸ் பானு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் மேற்கண்ட பிர்தவுஸ் பானுவின் மகளுடன் கல்லூரியில் படிக்கும் கீழக்கரையைச் சேர்ந்த முகமது காமின் என்பவரின் மனைவி அபிராஅல் (21) என்பவர் மேற்கண்ட நகையை திருடியது தெரியவந்தது.
திருமணம் முடிந்து குழந்தை பிறந்த நிலையில் அபிராஅல் கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கினார். அப்போது பிர்தவுஸ் பானுவின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தோழியை பார்க்க அவரின் வீட்டிற்கு அடிக்கடி அபிராஅல் சென்று வந்து சென்றுள்ளார். அப்போது பிர்தவுஸ் பானு வீட்டில் நகைகளை பீரோவில் வைப்பதை அபிராஅல் ஜாக்கெட் தைக்க கொடுத்து அதனை போட்டுப் பார்ப்பதாக கூறி வீட்டிற்குள் நகை இருக்கும் அறைக்கு சென்றிருக்கிறார். அப்போது நகையை திருடியிருக்கிறார்.
இதையடுத்து அபிரா அல்லை பிடித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில் தான் திருடியதை அபிரா அல் ஒப்புக்கொண்டுள்ளார். மேற்கண்ட நகைகளை திருடி ராமநாதபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரூ.7 லட்சத்திற்கு விற்று பணத்தை செலவு செய்து வந்ததாகவும் கூறினார். இதையடுத்து நகைகளை மீட்ட போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
‘குத்துனது நண்பனா இருந்தா செத்தாலும் சொல்லக்கூடாது’ என திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். ஆனால், தன்னுடன் நெருங்கி பழகிய தோழியே தன்னை ஏமாற்றி நகைகளை திருடி சென்ற சம்பவத்தை வெளியில் சொல்லாமல் விட்டால் தன் எதிர்கால வாழ்க்கை என்னாகும் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி தோழியின் மீது புகார் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் இந்த உலகில் யாரைத்தான் நம்பி பழகுவது என்ற கேள்விக்குரியை எழுப்பியுள்ளது.