Ramajayam Murder Case : ’10 ஆண்டுகளுக்கு பிறகு 12 பேருக்கு சம்மன்’ ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை..!
’நார்கோ அனலாசிஸ் என்ற முறையில் ரசாயனங்களை உடலில் செலுத்தி, கற்பனைகளை கட்டுப்படுத்தி அரை மயக்க நிலையில் உண்மையை கண்டறியும் முறையில் விசாரணை நடைபெறவுள்ளது’

அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது திருச்சியில் நடைபயிற்சி சென்ற ராமஜெயம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி கொடூரமாக கொல்லப்பட்டார்.

10 வருடத்திற்கு பிறகு கிடைத்த துப்பு - விசாரணை வளையத்தில் 21 பேர்
இந்த வழக்கு மாநில காவல்துறை, சிபிசிஐடி, சிபிஐ என கைம்மாறி தற்போது உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மீண்டும் மாநில காவல்துறைக்கே வந்துள்ளது. எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிபிசிஐடி டிஜிபியின் நேரடி கண்காணிப்பில் மீண்டும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் சந்தேகப்படும் 21 நபர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தனிப்படை தெரிவித்தது மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
10 ஆண்டுகளுக்கு பிறகு 12 பேருக்கு சம்மன்
அந்த இருப்பத்தியோர் நபர்களில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒத்துழைக்குமாறு அவர்களுக்கு திருச்சி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி அந்த 12 பேரும் நாளை காலை 11 மணிக்கு திருச்சி சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் 12 பேர் கண்டறியப்பட்டு உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்தியராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேரும் உண்மை கண்டறியும் சோதனையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
உண்மை கண்டறியும் சோதனை
ஆங்கிலத்தில் நார்கோ அனலாசிஸ் எனப்படும் இந்த உண்மை கண்டறியும் சோதனையில் சம்பந்தப்பட்ட நபரின் உடலில் சோடியம் பெண்டத்தால், சோடியம் அமிட்டால் என்ற அமிலங்கள் செலுத்தப்படும். அப்போது அவர்களின் மூளை நரம்புகளில் ஏற்படும் கற்பனைகளும், பொய் சொல்லும் உணர்ச்சியும் கட்டுப்படுத்தப்பட்டு என்ன செய்தார்களோ ? என்ன உண்மையோ அது மட்டுமே அரை மயக்கத்தில் இருக்கும் நபர்கள் பேசுவார்கள். இதனை வைத்து குற்றவாளிகள் யார் என்பதை காவல்துறை கண்டறியும். இந்த சோதனையின் மூலமாகவே ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் கண்டறியப்படவிருக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

