Crime News: மேட்ரிமோனியில் விரிக்கப்படும் வலை.. ப்ர்த்டே பார்ட்டி ப்ளான்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து தப்பியோடி இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது புனே. புனே நகரில் வசித்து வருபவர் பொறியியல் பட்டதாரி பெண். இவருக்கு திருமணத்திற்கு வரன் பார்க்கும் இணையதளம் மூலமாக 32 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிமுகமாகியுள்ளார்.
புனே நகரில் தனியார் நிறுவனத்தில் எஞ்சினியராக பணியாற்றும் அந்த பெண்ணிடம் அறிமுகமான அந்த நபர் தொடக்கத்தில் நன்றாக பழகியுள்ளார். மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் மூன்றாவது வாரம் அந்த இளைஞர் தனது பிறந்த நாள் விழாவில் பங்கேற்குமாறு அந்த பெண்ணிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது பிறந்தநாள் விழா நள்ளிரவு வரை நடைபெற்றது. பிறந்தநாள் விழா முடிந்த பிறகு அந்த நபர் மருஞ்சி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். மேலும், அங்கு வைத்து அந்த பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, அந்த வாலிபரை இளம்பெண் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும், அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அந்த குடியிருப்பிற்கு அவர் அதற்கு பின்பு வரவே இல்லை என்றும் அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் அவர் அளித்த முகவரிக்கு செல்ல முடிவு செய்துள்ளார். மத்திய பிரதேசம் தனது பூர்வீகம் என்றும், மத்திய பிரதேசத்தில் தனது முகவரி என்றும் அந்த இளைஞர் அளித்த முகவரிக்கு அந்த இளம்பெண் நேரில் சென்றுள்ளார். ஆனால், அந்த இளைஞர் அளித்த முகவரி போலியானது என்று அங்கு சென்ற பிறகுதான் அந்த இளம்பெண்ணுக்கு தெரிந்துள்ளது.
இதனால், மனமுடைந்த அந்த பெண் பிறகுதான் அந்த இளைஞர் தன்னை ஏமாற்றிவிட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஹின்சேவாடி காவல்நிலையத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், அந்த இளைஞர் மீது பாலியல் வன்புணர்விற்கான ஐ.பி.சி. 376, ஐ.பி.சி. 354பி, ஐ.பி.சி. 342 ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்