புதுக்கோட்டை: தங்க சங்கிலி பறிக்க முயன்ற வாலிபர்கள் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!
வடகாடு அருகே ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்ற ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற 2 வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் ரேகா (வயது 35). இவர் நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் நேற்று ரேகா கீரமங்கலத்தில் இருந்து தனது ஸ்கூட்டரில் ஆவணம் வழியாக நெடுவாசல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். வடகாடு, ஆவணம் சிவன் கோவில் அருகே வந்தபோது, இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் ரேகாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதையடுத்து ரேகா கூச்சலிடவே அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். பொதுமக்கள் வந்ததையடுத்து மர்மநபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து நெடுவாசல் வழியாக தப்பி சென்றனர். அப்போது நெடுவாசல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அலமேலு (60) என்பவரின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியையும் பறித்து சென்றனர். ஆனால் அது கவரிங் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நெடுவாசல் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அந்த மர்மநபர்களை பிடிக்க விரட்டி சென்றுள்ளனர். நெடுவாசல் ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக மர்மநபர்கள் சென்ற போது சாலை முடிவடைந்தது. இதையடுத்து மர்மநபர்கள் வேறு வழியின்றி மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு வயல்வழியாக தப்பி ஓடினர். இந்தநிலையில், கல்லணை கால்வாய் அருகே உள்ள முட்புதரில் பதுங்கி இருந்த மர்மநபர்கள் 2 பேரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரின் கைகளையும் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த வடகாடு காவல்துறையிடம் 2 பேரையும் ஒப்படைத்தனர். பின்னர் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் விருதுநகர் மாவட்டம் வளையன்குளம் பகுதியை சேர்ந்த செல்வேந்திரன் (29), தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை சி.ஆர்.காலனியை சேர்ந்த ரஞ்சித் (34) என்பதும், இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 திருடர்களையும் பிடித்து கொடுத்த பொதுமக்களை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர். பொதுமக்கள் இணைந்து திருடர்களை மடக்கிபிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்