Puducherry: ஆள்சேர்ப்பு உரிமம் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம்; சி.பி.ஐ அதிகாரியிடம் சிக்கியது எப்படி ?
புதுச்சேரியில் தனியார் நிறுவனத்திற்கு ஆள்சேர்ப்பு உரிமம் வழங்க 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மத்திய உதவி தொழிலாளர் ஆணையரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

புதுச்சேரி: தனியார் நிறுவனத்திற்கு ஆள்சேர்ப்பு உரிமம் வழங்க 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மத்திய உதவி தொழிலாளர் ஆணையரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆள்சேர்ப்பு உரிமம் வழங்க 1 லட்சம் ரூபாய் லஞ்சம்
புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் ஜெயா நகர், பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு வளாகத்தில் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, உதவி தொழிலாளர் ஆணையராக பணியாற்றி வரும் ரமேஷ்குமார், 32; தனியார் நிறுவனங்கள் ஆள்சேர்ப்பு உரிமம் வழங்க லஞ்சம் வாங்குவதாக சி.பி.ஐ.,க்கு புகார் சென்றது.
சி.பி.ஐ சிக்கிய உதவி தொழிலாளர் ஆணையர்
அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், புகார் உண்மை என தெரியவந்தது. அதன்பேரில் சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் இருந்து டி.எஸ்.பி., சேதுமாதவன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரியில் முகாமிட்டு, மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை கண்காணித்து வந்தனர்.
நேற்று மதியம் 1 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், உதவி தொழிலாளர் ஆணையர் ரமேஷ்குமாரிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த சி.பி.ஐ குழுவினர், இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
ரூ.1.5 லட்சம் லஞ்சம்
பின்னர் இருவரையும் தனித்தனியே வைத்து விசாரித்தனர். தேனியை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக உரிமம் கோரி, புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளது. மனுவை ஆய்வு செய்த உதவி ஆணையர் ரமேஷ்குமார், ரூ.1.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இறுதியாக 1 லட்சம் ரூபாய் கேட்டார்.
இரவு 11 மணி வரை நீடித்த விசாரணை
அந்த நிறுவனம், புதுச்சேரி தேங்காய் திட்டை சேர்ந்த இளங்கோ என்பவர் மூலம் பணத்தை கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ., அதிகாரிகள், அதே ஜெயா நகர் 4வது குறுக்கு தெருவில் உள்ள உதவி ஆணையர் ரமேஷ்குமார் வீட்டில் மூன்று மணி நேரம் சோதனை நடத்தினர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் டி.எஸ்.பி சேது மாதவன் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இளங்கோவின் மனைவி மற்றும் மகனையும் வரவழைத்து விசாரித்தனர். இந்த விசாரணை இரவு 11 மணிக்கு மேலும் நீடித்தது.
சிக்கியது எப்படி?
இளங்கோ பணம் கொடுக்க பைக்கில் நேற்று மதியம் ஜெயா நகருக்கு வந்துள்ளார். ஆனால், மத்திய உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் இருக்கும் இடம் தெரியாமல், அதே நகரில் இருசக்கர வாகனத்தில் சுற்றி சுற்றி வந்துள்ளார். அப்போது, அலுவலகத்திற்கு செல்லும் வழியில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.பி.ஐ அதிகாரிகளிடம் வழி கேட்டு உதவி ஆணையர் அலுவலகம் சென்றது குறிப்பிடத்தக்கது.





















