ஒரே ஒரு லிங்க்... பறிபோன ₹1.13 கோடி! புதுச்சேரியில் ஆன்லைன் டிரேடிங் பெயரில் மெகா மோசடி..!
தெரியாத நபர்கள் பகிரும் லிங்குகளை நம்பி பணம் முதலீடு செய்ய வேண்டாம் என சைபர்கிரைம் போலீஸ் எச்சரிக்கை!

புதுச்சேரி: அதிக லாபம் தரும் ஆன்லைன் டிரேடிங் (Online Trading) ஆசையில் விழுந்து, புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உட்பட நான்கு பேர் சுமார் 1.15 கோடி ரூபாய்க்கும் மேல் இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் டிரேடிங் ஆசையில் 1.13 கோடி இழப்பு
புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வர்த்தகம் (online Trading) மூலம் பணம் சம்பாதிக்க விரும்பியுள்ளார். இதற்காக சமூக வலைதளங்களில் அவர் தேடியபோது, மர்ம நபர் ஒருவர் அவரிடம் அறிமுகமாகியுள்ளார்.
"குறைந்த முதலீடு, அதிக லாபம்" என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்த அந்த நபர், டிரேடிங் நுணுக்கங்களைக் கற்றுத் தருவதாகக் கூறி அவரை ஒரு வாட்ஸ் ஆப் (WhatsApp) குழுவில் இணைத்துள்ளார். அந்தப் பகுதியில் தினசரி பங்குச் சந்தை மற்றும் டிரேடிங் தொடர்பான போலித் தகவல்கள் பகிரப்பட்டு, முதலீட்டாளர்களை நம்ப வைக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
1.13 கோடி அபேஸ்
அந்தக் கும்பலின் பேச்சை உண்மை என நம்பிய மூலக்குளம் நபர், அவர்கள் அனுப்பிய ஒரு போலி செயலியில் (App/Link) கணக்கைத் தொடங்கி, பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார். திரையில் (mobile Screen) அவரது பணம் பல மடங்காகப் பெருகியதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்துள்ளார். ஆனால், அந்த லாபத் தொகையைத் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயன்றபோது தான் அசல் முகம் வெளிப்பட்டது.
"பணத்தை எடுக்க வேண்டுமானால் வருமான வரி (Income Tax) மற்றும் ஜி.எஸ்.டி. (GST) செலுத்த வேண்டும்" என்று மோசடி கும்பல் மீண்டும் பணம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
தொடரும் பாதிப்புகள்: 4 பேர் ஏமாற்றம்
இதேபோல், சொக்க நாதன்பேட்டை சேர்ந்தவர் 59 ஆயிரத்து 711, ரெயின்போ நகரை சேர்ந்தவர் 65 ஆயிரம், வடமங்கலத்தை சேர்ந்தவர் 75 ஆயிரம் என ஒட்டுமொத்தமாக இந்த நான்கு பேரிடமிருந்து ரூ. 1 கோடியே 15 லட்சத்து 74 ஆயிரத்து 711 பணத்தை மோசடி கும்பல் சுருட்டியுள்ளது.
போலீசார் விசாரணை மற்றும் எச்சரிக்கை
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் செல்போன் எண்களைக் கொண்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.





















