Cyber Crime: புதுச்சேரியில் 2 நாட்களில் இணைய வழி மோசடியில் ரூ.40 லட்சம் இழப்பு - ஏமாந்தது எப்படி..?
புதுச்சேரியை சேர்ந்த 13 நபர்கள் கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு இணைய வழி மோசடியில் சிக்கி 40 லட்சம் ரூபாய் பணத்தை இழந்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த 13 நபர்கள் கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு இணைய வழி மோசடியில் சிக்கி 40 லட்சம் ரூபாய் பணத்தை இழந்தனர்.
தேங்காய் தீட்டைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் 10 லட்சம் ரூபாய் கொடுத்து பிட்காயின் வாங்கினால் அதிக லாபம் தருகிறேன் என்று சொன்னதை நம்பி சென்னையை சேர்ந்த ஒரு நபருக்கு பணத்தை அனுப்பி இன்று வரை அவரிடமிருந்து எந்த தகவலும் வராததால் புகார் கொடுத்துள்ளார். மேலும் கனக செட்டிகுளத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் 21 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பி பிட்காயின் வாங்க அவர் வங்கிக் கணக்கில் இருந்து பணம் சென்று விட்டது அவருக்கு பிட்காயின் எதுவும் வரவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரியைச் சேர்ந்த ஜான்பால் என்பவர் இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கொடுக்கிறோம் என்று சொன்னதை நம்பி ஆறு லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி அவர்களிடமிருந்து எந்த தகவலும் வராததால் அது சம்பந்தமாக புகார் கொடுத்து ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். புதிய எண்ணில் இருந்து வந்த வீடியோ காலை எடுத்ததால் அந்த வீடியோவை ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டு இதை மார்பிங்க் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி ஒரு நபரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாயும் ஒரு நபரிடம் இருந்து 2500 ரூபாயும் பணத்தை இணைவழி மோசடிக்காரர்கள் பறித்துள்ளனர். அது சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
பேங்க் மேனேஜர் பேசுகிறேன் உங்களுடைய கிரெடிட் கார்டில் அதிக பணத்தை பெற்று தருகிறேன் என்று ஓடிபி நம்பரை வாங்கி 33,000 மோசடி, ஓஎல்எக்ஸ் இல் ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய லேப்டாப்பை 33 ஆயிரத்துக்கு தருகிறேன் என்று சொன்னதை நம்பி பணத்தை அனுப்பி பிறகு அவரிடம் இருந்து லேப்டாப் வரவில்லை என்று புகார் தெரிவித்தார். உங்களுக்கு புதிய ஏடிஎம் கார்டு வருகிறது அதற்கான ஓடிபி சொல்லுங்க என்று சொல்லி அவருடைய வங்கி கணக்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது. லோன் ஆப்இல் 2000 ரூபாய் உடனடி கடன் வாங்கியவரை மிரட்டி உங்கள் புகைப்படத்தை மார்பிங் செய்து உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என்று 17 ஆயிரம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களே இணைய வழியில் வருகின்ற எந்த ஒரு முதலீடு, வேலை வாய்ப்பு, அதிக லாபம், அதிக வருமானம், போன்ற எந்த அழைப்பையும் ஏற்க வேண்டாம்.
வங்கி மேலாளர் பேசுகிறேன் அல்லது வேறு எந்த காரணம் சொல்லி ஓடிபி என்னை கேட்டாலும் (OTP) சொல்ல வேண்டாம்.
புதிய எண்ணில் இருந்து வருகின்ற வீடியோ காலில் பேச வேண்டாம்.
ஓஎல்எக்ஸ் (OLX) இல் பொருள் வருவதற்கு முன்பு பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.
பழைய பொருட்களை வாங்கி விற்கும் வலைதளங்களில், (APP) அவர்கள் கூறுவதை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.
உடனடியாக லோன் தருகிறேன் என்று சொல்வதை நம்பி எந்த loneapp லும் கடன் வாங்க வேண்டாம்.
கிரிப்டோ கரன்சி பிட்காயினில் முதலீடு செய்யுங்கள் அதிக லாபம் கிடைக்கும் என்று சொன்னால் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.
இணைய வழியில் முதலீடு செய்யுங்கள் அதிக லாபம் தருகிறோம் என்று சொல்வதை நம்பி பேராசை கொண்டு முதலீடு செய்து ஏமாறவேண்டாம் என இணை வழி காவல்துறை கூறியுள்ளது.