முத்துப்பாண்டி ஸ்டைலில் காதலைச் சொன்ன இளைஞர்! குடும்பத்தையே கூண்டோடு தூக்கிய போலீஸ் - நடந்தது என்ன?
Puducherry: புதுவையில் இளம்பெண்ணிடம் ஒரு தலை காதல் காரணமாக திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்திய இளைஞரை, அவரது குடும்பத்துடன் போலீசார் கைது செய்தனர்.
ஒருதலைக் காதலை பலரும் பலவிதமாக வெளிப்படுத்துவார்கள். அதில் ஒரு விதம் தனது காதலுக்குரியவரின் பெயரை நெஞ்சில் பச்சை குத்தி, அதன் மூலம் காதலுக்குரியவரை தனது காதலை ஏற்றுக்கொள்ள வைப்பது என்பது ஆதிகாலத்து டெக்னிக். அந்த டெக்னிக்கை இப்போதும் பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
சிறைப்பறவையான காதல் பறவை:
அப்படியான ஒரு முயற்சியைச் செய்து தனது ஒருதலைக் காதலை வெளிபடுத்திய இளைஞர் ஒருவரை காவல்துறை குடும்பத்த்துடன் கூண்டோடு தூக்கி சிறையில் அடைத்துள்ளது. ஒருதலைக் காதலை வெளிப்படுத்தியது தவறா? அதற்காகவா காவல்துறை கைது செய்தது, அதுவும் குடும்பத்தையே கைது செய்தது என்றால் சரியான காரணம் இல்லாமல் இருக்குமா? அது என்ன காரணம்? என்ன நடந்தது? என்பதை இங்கு காணலாம்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை வாழைக்குளம் அக்காமாடசாமி வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். 28 வயதான இவர் லாஸ்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அருகில் பழக்கடை நடத்தி வருகின்றார். தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துவரும் 21 வயது பெண் ஊழியர் ஒருவர், வேலை முடித்து வீட்டிற்குச் செல்லும்போது பழங்கள் வாங்கிச் செல்வதை வாடிக்கையாக் கொண்டுள்ளார்.
தோல்வியில் முடிந்த காதல்:
பழம் வாங்க வந்த 21 வயது இளம் பெண்ணிடம் தொடக்கத்தில் இயல்பாக பேசி வந்துள்ளார் பாலமுருகன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல பாலமுருகனுக்கு அந்த 21 வயது இளம் பெண்மீது காதல் ஏற்பட்டுள்ளது. கொஞ்ச காலம் ஒருதலையாக காதலித்து வந்த பாலமுருகன். ஒருநாள் கடைக்கு இயல்பாக பழம் வாங்க வந்த அந்த பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனை எதிர்பார்க்காத அந்த பெண், எனக்கு உங்கள் மீது இதுபோன்ற எண்ணம் எதுவும் இல்லை என தெரிவித்ததுடன் இதுபோன்று இனி பேசவேண்டாம் எனவும் எச்சரித்ததாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் ஒருதலைக் காதல் தலைக்கேரிய பாலமுருகன் ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த பெண்ணிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அந்த பெண் இதனை மறுத்ததாக தெரிகின்றது. ஆனால் தனது ஒருதலைக் காதலை திருமணத்தில்தான் முடிப்பேன், மணந்தால் மகா தேவி இல்லையேல் மரணதேவி என்பதுபோல், அந்த 21 வயது பெண்ணின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திச் சென்று இம்ப்ரஸ் செய்ய முயற்சி செய்து, அதனை சமூகவலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதனை அறிந்த அந்த இளம் பெண் பாலமுருகனை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் பாலமுருகனின் முயற்சி இம்முறையும் தோல்வியில் முடிந்தது.
மிரட்டல்:
இந்நிலையில் நேற்று முன்தினம் அதாவது மே 3ஆம் தேதி பாலமுருகன் தனது தாய், தங்கையுடன் நேரடியாக அந்த பெண்ணின் வீட்டிற்கே திருமணம் குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். அவர்கள் சென்ற நேரத்தில் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாததால் அந்த இளம் பெண் மட்டும் இருந்துள்ளார். அவரிடம் பாலமுருகனின் தாய் மற்றும் அவரது தங்கை இருவரும் பாலமுருகனை திருமணம் செய்து கொள்ளும்படி பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை வாக்கு வாதமாக மாற, எனது மகனை திருமணம் செய்யவில்லை என்றால் உங்கள் குடும்பத்தினை கொலை செய்து விடுவோம் என கில்லி பட முத்துப்பாண்டி தயார் ஸ்டைலில் மிரட்டியதாக கூறப்படுகின்றது.
சிறையில் அடைப்பு:
இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் பாலமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அன்சர்பாஷா அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பாலமுருகன், அவரது தாயார் சித்ரா மற்றும் பாலமுருகனின் தங்கை பரமேஸ்வரி ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளது.