காவல்துறை தகுதி தேர்வுக்கு எடையை கூட்டி காட்ட 4 பேண்ட்களை போட்டு வந்த பெண் தகுதி நீக்கம்
’’அப்பெண், ஆடை மேல் ஆடையாக அணிந்திருந்த பேண்ட்களை ஒவ்வொன்றாக கழற்றினார். ஒரு ஜீன்ஸ் பேண்ட், அதன் மீது 3 லோயர் பேண்ட்கள் அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது’’
புதுச்சேரி பெண் கான்ஸ்டபிள் பணிக்கான உடற்தகுதி தேர்வில், எடையை அதிகரித்து காட்டுவதற்காக, 4 பேண்ட் அணிந்து, முறைகேட்டில் ஈடுபட்ட பெண் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். புதுச்சேரியில் காவலர் காலி பணியிடங்களில் பெண்களுக்கான தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வு வரும் 11 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடக்கிறது. முதல் நாளில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீஷியன், 29 டெக் ஹேண்ட்லர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களில் 14 ஆயிரத்து 787 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 19 ஆம் தேதி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. ஆண்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, எடை, மார்பளவு, ஓடடப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இது வரை ஆண்களில் 1,744 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பெண்களுக்கான தேர்வு நேற்று தொடங்கியது. வரும் 11 ஆம் தேதி வரை 5 நாட்கள் பெண்களுக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வில் பங்கேற்ற பெண்களுக்கு முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பின்னர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகியவை நடத்தப்பட்டது. முதல் நாள் தேர்வில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த நிலையில், தேர்வுக்கு அழைக்கப்பட்ட 750 பேரில், 324 பெண்கள் பங்கேற்றனர். இதில், 188 பேர் தகுதி பெற்றனர். உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற ஒரு பெண் உடல் மெலிந்து இருந்தார். ஆனால், காவலர் உடல் தகுதிக்கு தேவையான 45 கிலோ எடை இருந்தார். போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெண் காவலர்கள், தனி அறைக்கு அழைத்து சென்று அப்பெண்ணை சோதனை செய்தனர். அப்பெண், ஆடை மேல் ஆடையாக அணிந்திருந்த பேண்ட்களை ஒவ்வொன்றாக கழற்றினார். ஒரு ஜீன்ஸ் பேண்ட், அதன் மீது 3 லோயர் பேண்ட்கள் அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், 43 கிலோ எடை கொண்ட அப்பெண், உடற்தகுதி தேர்வுக்கு தேவையான 45 கிலோ எடையை அதிகரித்து காட்டுவதற்காக 4 பேண்ட்கள் அணிந்து வந்தது தெரிந்தது. கழற்றப்பட்ட பேண்ட்கள் 2.2 கிலோ எடை இருந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட அப்பெண்ணை தகுதி நீக்கம் செய்து, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்