“புதைக்கும் வழக்கத்தை மாற்ற சொல்லி பிரமுகர்கள் அழுத்தம்” - தந்தூரியால் உயிரிழந்த மாணவரின் தந்தை!
ஆரணியில் நண்பர்களுடன் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பள்ளி மாணவன் உயிரிழப்பு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உணவு மாதிரி முடிவு வந்ததும் ஓட்டல் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி மோகனன் தெருவை சேர்ந்த ஆப்பிள் பள்ளியின் உரிமையாளர் கணேஷ் (எ) ஆப்பிள் கணேஷ் இவருக்கு திருமுருகன் வயது (17) மற்றும் கோகுல் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் திருமுருகன் என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தற்போது 12ம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு கடந்த 24ந் தேதி நண்பர்களுடன் ஆரணி நகர் பகுதியில் காந்தி ரோட்டில் உள்ள 5 ஸ்டார் எலைட் என்ற அசைவ உணவகத்தில் நண்பர்களுடன் அசைவ உணவு சிக்கன் 65, தந்தூரி சிக்கன் மற்றும் பிரைஸ் ரைஸ் போன்ற அசைவ உணவுகள் சாப்பிட்டுள்ளனர். மேலும் அன்று இரவு முழுவதும் திருமுருகன் வயிற்று வலி வாந்தி ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளார். உடனடியாக திருமுருகனின் பெற்றோர் மறுநாள் காலையில் வீட்டின் அருகே உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஆனால் திருமருகனுக்கு வயிற்று வலி வாந்தி தொடர்ந்து தொந்தரவு ஏற்பட்டதால் நாளடைவில் சோர்வடைந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி வயிற்று வலியால் துடித்த திருமுருகன் மாணவனை மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் செல்லும் வழியிலேயே மாணவன் திருமுருகன் பரிதாபமாக உயிரழந்தார்.பின்னர் மாணவனின் சடலத்தை உடனடியாக ஆரணிக்கு கொண்டு வந்த பெற்றோர் மாணவனின் உடலை மறுநாள் காலையில் உறவினர்கள் முன்னிலையில் இடுகாட்டில் வைத்து எரித்து அடக்கம் செய்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று இறந்த மாணவனின் தந்தை கணேஷ் ஆரணி நகர காவல்நிலையத்திற்கு வந்து என் மகன் சாவிற்கு காரணமான 5 ஸ்டார் எலிட் என்ற அந்த தனியார் அசைவ உணவகம் தந்தூரி மற்றும் பிரியாணி சாப்பிட்டதால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளது. மகன் இறந்த துக்கத்தில் இருந்த தன்னிடம் புதைக்கும் வழக்கத்தை மாற்றி எரிக்கும் படி சில முக்கிய பிரமுகர்கள் அழுத்தம் கொடுத்தால் சடலத்தை எரித்து விட்டு இறுதி சடங்கு செய்து விட்டோம் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு முன்னதாக திருமுருகன் தன்னுடன் சாப்பிட்ட நண்பர்களிடம் செல்போன் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார் நாம் சாப்பிட்ட பகுதியில் இருக்கும் ஒரு ஓட்டலில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தார். அந்த சிறுமியை போன்ற நானும் இறந்து விட வாய்ப்புள்ளது. எனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருக்கிறது எனவே நீங்கள் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளதாகவும் இதைப்பார்த்த அவரது நண்பர்கள் கதறி அழுததாக கூறப்படுகிறது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் பேசிய போது;
கடந்த 29 தேதி சமூக வலைதளங்களில் பரவிய தகவல் எதிரொலியாக நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 30- ம் தேதி சம்பந்தப்பட்ட ஓட்டலுக்குச் சென்று ஆய்வு செய்து அங்கு இருந்த அசைவ உணவு மாதிரிகளை சேகரித்து அதனை சேலத்திற்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் நாளை மாலைக்குள் வந்துவிடும் இந்த மாணவனின் தந்தை நேற்று ஆர்டிஓ மற்றும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் சேலத்திலிருந்து ஆய்வக முடிவுகள் வந்த பிறகு முழு விவரம் தெரியவரும் சோதனை முடிவுகளைக் பொருத்து சம்பந்தப்பட்ட ஓட்டலின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.