Accident: தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு - நிற்காமல் சென்ற விரைவு ரயில், உதவாத அபாய சங்கிலி!
சங்கரன்கோவிலை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து தென்காசி வழியாக செல்லும் கொல்லம் விரைவு ரயிலில் நேற்று இரவு புறப்பட்டுள்ளார்.
விருத்தாச்சலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து தென்காசி வழியாக செல்லும் கொல்லம் விரைவு ரயிலில் உறவினர்கள் 11 பேருடன் நேற்று இரவு புறப்பட்டுள்ளார். இந்த ரயில் இரவு 8 மணியளவில் கடலூர் மாவட்டம் பூவலூர் அருகே வந்தபோது கஸ்தூரி வாந்தி வந்துள்ளது. உடனடியாக கழிவறை பக்கம் இருக்கும் கை கழுவும் இடத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அப்பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்களும், சக பயணிகளும் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அபாய சங்கிலி வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனால் அவசரத்துக்கு ரயிலில் இருந்து குதிக்க உறவினர்கள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
அவர்களை தடுத்த ரயில்வே போலீசார் அருகிலிருந்த இன்னொரு பெட்டிக்கு சென்று அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ஆனால் அதற்கு கொல்லம் விரைவு ரயில் 8 கி.மீ. தூரம் கடந்து வந்துள்ளது. 10 நிமிடமாக தேடியும் அப்பகுதியில் கஸ்தூரியை கண்டுபிடிக்க முடியாததால் ரயில் மீண்டும் புறப்பட்டு விருத்தாச்சலம் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது. அங்கு இறங்கிய அப்பெண்ணின் குடும்பத்தினர் ரயில்வே போலீசாரிடம் மாயமான கஸ்தூரியை கண்டுபிடித்து தருமாறு கதறி அழுதனர். இது அங்கிருந்த பொதுமக்களை கண்கலங்க வைத்தது.
தொடர்ந்து பூவலூர் அருகே பெண் ஒருவர் தண்டவாளம் அருகே இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசாரும், உறவினர்களும் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் கர்ப்பிணியான கஸ்தூரி உயிரிழந்து கிடந்தார். உடனடியாக அவரது உடலை மீட்ட ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலவித கனவுகளுடன் சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணி கஸ்தூரி புறப்பட்ட சில மணி நேரத்திலேயே ரயில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் விரைவு ரயில் ஆபத்து காலத்தில் உதவ அபாய சங்கிலி வைக்கப்பட்டிருந்தும் அது வேலை செய்யாமல் இருந்தது ரயில்வே துறையில் குறைபாடா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் உடனடியாக தெற்கு ரயில்வே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் கொல்லம் சென்றவுடன் அனைத்து அபாய சங்கிலியையும் சோதனை செய்யப்படும் என்றும், டிக்கெட் பரிசோதகர், ரயில் ஓட்டுநர், பொறியியல் வல்லுநர்கள், போலீசார் என அனைவரிடமும் விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.