சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்? - அலட்சியம் காட்டிய போலீஸ்? பின்னணி என்ன?
தலையில் பலத்த காயத்துடன் சாலையில் சுய நினைவின்றி கிடந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
உத்திரபிரதேசத்தில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு விபத்தாக மாற்ற முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டு பாலியல் வன்கொடுமை :
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி , சிறுமியை கடத்திய மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரம் தூக்கி எறிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தற்போது மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினர் இந்த வழக்கை விபத்து என திசை திருப்பியுள்ளதாக சிறுமியின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி கவுந்தியாரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் யமுனா பகுதியில் உள்ள கவுந்தியாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்திருக்கிறது.
சிறுமியின் நிலை கவலைக்கிடம் :
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று சிறுமியை, அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞனும் அவருடைய இரண்டு நண்பர்களும் திட்டமிட்டு கடத்தியுள்ளனர். அறையில் அடைத்து வைக்கப்பட்ட பெண்ணை மூவரும் கொடுமையான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அந்த சிறுமியின் பிறப்புறுப்பை கொடூரமாக சேதப்படுத்தியுள்ளார்கள் என்றும் உடலின் பல இடங்களில் கடித்த காயங்கள் இருப்பதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. தலையில் பலத்த காயத்துடன் சாலையில் சுய நினைவின்றி கிடந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியில் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
விபத்து என மாற்ற முயற்சிக்கும் காவல்துறையினர் :
இந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் என கூறியும், இந்த வழக்கை விபத்தாக போலீசார் மாற்றியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியதாக அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் “பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போதுதான் இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் “ என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவுடன் , உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை விசாரணை செய்துள்ளனர். விசாரணை முடிவில் கவுந்தியாரா காவல் நிலைய காவலர்கள் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.