Marital Rape: திருமண உறவுக்குள் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்கும் சட்டம்.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்குவது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு அளித்த மாறுபட்ட தீர்ப்புகளின் காரணமாக, அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் கிரிமினல் குற்றமாக்குவது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு அளித்த மாறுபட்ட தீர்ப்புகளின் காரணமாக, அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 11 அன்று, டெல்லி உயர் நீதிமன்றம் திருமண உறவில் நிகழும் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்குவது குறித்த வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கியது. இரண்டு நீதிபதிகள் அடங்கிய இந்த அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியிருந்தது.
நீதிபதி ராஜீவ் சக்தெர் இந்திய அரசியலமைப்பின் இபிகோ 375வது சட்டப்பிரிவில் திருமண உறவில் பாலியல் வன்கொடுமைக்கு வழங்கப்பட்டுள்ள விதிவிலக்கு என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளான சட்டப்பிரிவுகள் 14,15,21 ஆகியவற்றிற்கு எதிரானது எனவும் அதனால் இந்த விதிவிலக்கை நீக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
எனினும் மற்றொரு நீதிபதியான ஹரி சங்கர் இதில் உடன்பட மறுத்ததோடு, திருமணம் காரணமாக இருவருக்குள் ஏற்படும் புரிந்துகொள்ளக்கூடிய வேறுபாடுகளின் காரணமாக அடிப்படை உரிமையான சட்டப்பிரிவு 14-ன் படி இதனை நீக்கும் தேவை நீதிமன்றத்திற்கு இல்லை எனவும் கூறியிருந்தார்.
மேலும், இந்த விசாரணையின் போது நீதிபதி ஹரி சங்கர் முன்வைத்திருந்த கருத்து ஒன்று சர்ச்சையாகியது. `தன் மனைவிக்கு விருப்பம் இல்லையென்ற போதும், சில நேரங்களில் கணவர் அவரைத் தன்னுடன் பாலுறவு கொள்ள வற்புறுத்துவது உண்டு. சற்றே பணிவாகவே கேட்கிறேன்.. இந்த அனுபவமும், அந்நியர் ஒருவரால் வன்கொடுமை செய்யப்படுவதும் ஒன்றா?’ என நீதிபதி ஹரி ஷங்கர் கேள்வி எழுப்பியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்ததோடு, சில அரசியல்வாதிகளும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.
சிவ சேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `இதனைப் பணிவாகவும் சொல்லலாம்.. பெரும்பாலான பெண்கள் மீதான அதிகாரத்தோடும் சொல்லலாம் மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே.. ஒரு அந்நியரோ, கணவரோ, ஒரு பெண் மீதோ, தனது மனைவி மீதோ தன்னைத் தானே வற்புறுத்தி பாலியல் உறவு கொண்டால் எழும் கோபம், அவமரியாதை, அத்துமீறல் ஆகியவற்றின் அனுபவங்கள் அனைத்தும் ஒன்றே.. உங்களைச் சுற்றியுள்ள பெண்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நன்றி’ எனறு கூறியிருந்தார்.
திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் கிரிமினல் குற்றமாக்குவதைக் கோரிய இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ள குஷ்பூ சைஃபி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ராஜீவ் சக்தெரின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், அதே நேரம் நீதிபதி ஹரி சங்கரின் தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு நீதிபதிகளும் இந்த வழக்கின் விவகாரம் சட்டத்தின் முன் கணிசமான கேள்விகளை உற்பத்தி செய்வதாக சுட்டிக் காட்டியிருப்பதால், இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் மேற்கொள்வதை ஏற்கனவே வரவேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.