அறுபடையில் அறுவடை செய்ய புறப்பட்ட போலி ஐஏஎஸ்.... திருச்செந்தூரில் விஐபி தரிசனம்... பழனியில் சிக்கினார்!
Fake IAS Officer: முருகனின் ஆறுபடை வீடுகளில் தனது போலி ஐஏஎஸ் மவுசை வைத்து சிறப்பு தரிசனம் செய்த முடிவு செய்திருந்த குமாரை, டமாரென பிடித்திருக்கிறது போலீஸ்.
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு கருப்பு நிற ஸ்கார்பியோ கார் ஒன்று, சைரன் ஒலிக்க... பாம்...பாம்.. பாம்... என வலம் வருகிறது. பழனி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு நேராக வந்த அந்த காரில் டிப்டாப் ஆபிசர் ஒருவர் இறங்குகிறார். நேராக தங்கும் விடுதி வரவேற்பறைக்கு சென்ற அந்த அதிகாரி, ‛ஐ ஆம் ஐஏஎஸ் ஆபிசர்... எனக்கு ஒரு ரூம் தாங்க...’ என்கிறார். வரவேற்பறை ஊழியர்களும், பதட்டமாகி , ‛வாங்க சார்... உட்காருங்க சார்...’ என சீரியஸ் ஆகிறார்கள்.
‛எந்த ரூம் நல்லா இருக்கும்... நல்ல ஏசி வர்ற ரூம் தாங்க...’ என கெடுபிடியை உயர்த்துகிறார் அந்த அதிகாரி. ‛எல்லா ரூமும் நல்லா இருக்கும்... உங்களுக்கு சூப்பர் ரூம் தர்றோம் சார்...’ என விடுதி பொறுப்பாளர்கள் வாஞ்சையோடு கூறுகிறார்கள். சரி போகலாமா... என அந்த அதிகாரி கூற, ‛சார்... வாடகை...’ என தலையை சொறிந்துள்ளனர். ‛என்னது காசா... என்னிடமேவா... நான் யார் தெரியுமா... ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடம் காசு கேட்குறீங்களா...’ என கொந்தளித்துள்ளார் அதிகாரி.
‛சார்... உங்க ஐடி கார்டையாவது காட்டுங்க சார்...’ என விடுதி மேலாளர் கேட்க, ’என்ன தைரியம் இருந்தால் என்னோட ஐடி கார்டை கேட்ப்ப..’ அதிகாரி கடுப்பாகிறார். சந்தேகம் அடைந்த மேலாளர், ‛சார்... இங்குள்ள வருவாய் துறை அதிகாரிகள் யாரையாவது பரிந்துரை பண்ணச் சொல்லுங்க... நான் ரூம் தர்றேன்...’ என்றுள்ளார். கோபத்தின் உச்சிக்கு சென்ற அதிகாரி, செய்வதறியாது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி மேலாளர், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் போலீஸ் வரும் தகவல் அந்த ஆபிசருக்கு தெரியவருகிறது. உடனே அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சிக்கிறார். அவரை விடுதி ஊழியர்கள் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவரை பழனி அடிவாரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சம்மந்தப்பட்ட நபர் பெயர் குமார் என்பதும், மயிலாடுதுறையில் வசித்து வருவதும் தெரியவந்தது. தனது காரில் தமிழக அரசு பதிவு போல போலியாக நம்பர் பிளேட் எழுதி, காரில் சைரன் வைத்து நடமாடும் ஐஏஎஸ் அதிகாரியாக பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்தது.
பல இடங்களில் தன்னை ஐஏஎஸ்., அதிகாரி எனக்கூறி பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்ததும் தெரியவந்தது. கடைசியாக திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று, அங்கு ஐஏஎஸ் அதிகாரி போர்வையில், சிறப்பு தரிசனம் செய்து வந்ததும் , அதே பார்மட்டில் பழனியில் சிறப்பு தரிசனம் செய்ய முயற்சித்த போது, பிடிபட்டதும் தெரியவந்தது. முருகனின் ஆறுபடை வீடுகளில் தனது போலி ஐஏஎஸ் மவுசை வைத்து சிறப்பு தரிசனம் செய்த முடிவு செய்திருந்த குமாரை, டமாரென பிடித்திருக்கிறது போலீஸ். டுபாக்கூர் ஐஏஎஸ் அதிகாரி குமார், இதற்கு முன் எங்கெல்லாம் கைவரிசை காட்டினார் என்பது குறித்து போலீசார் ஆழமாக விசாரணை நடத்தி வரகின்றனர்.