Heroin Seized: ரூ.400 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்தி வந்த பாகிஸ்தான் படகு: 6 பேர் கைது!
குஜராத் கடல் எல்லைக்குள் கொண்டு வரப்பட்ட ரூபாய் 400 கோடி மதிப்பிலான ஹெராயினை, பாகிஸ்தான் படகில் இருந்து பறிமுதல் செய்ததுடன் 6 பாகிஸ்தானியர்களையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
இந்தியாவின் கடல் எல்லை வழியாக போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் இந்தியாவிற்குள் நுழைந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக இந்திய கடலோர காவல்படை தீவிர பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருட்கள் ஒன்று இந்தியாவிற்குள் கடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த போதைப் பொருட்கள் குஜராத் வழியாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து குஜராத் கடலோர காவல் படையினரும், குஜராத் தீவிரவாதத் தடுப்பு பிரிவினரும் இன்று அதிகாலையில் அதிரடியாக சோதனையில் இறங்கினர். அப்போது, அல் ஹூசைனி என்ற பெயருடைய படகு ஒன்று குஜராத்தின் கடலோர எல்லைக்குள் நுழைந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய வகையில் அந்த படகு இருந்ததால், அந்த படகை இந்திய கடலோர காவல்படையினர் சுற்றி வளைத்தனர். இதையடுத்து, அந்த படகை கடலோர காவல்படையினர் சுற்றி வளைத்தனர். அந்த படகில் கடலோர காவல்படையினர் உள்ளே சென்று சோதனை செய்தபோது, படகின் உள்ளே பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேர் இருந்தனர். மேலும், படகின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 77 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களையும் கண்டுபிடித்தனர். உடனடியாக, படகில் இருந்த ஹெராயின் பொருட்களை பறிமுதல் செய்த கடலோர காவல்படை பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் பொருட்களின் மதிப்பு சுமார் ரூபாய் 400 கோடி ஆகும்.
The @IndiaCoastGuard in a joint Ops with ATS #Gujarat has apprehended one Pak Fishing Boat "Al Huseini" with 06 crew in Indian🇮🇳 waters carrying 77 kgs #heroin worth approx 400 crs
— PRO Defence Gujarat (@DefencePRO_Guj) December 20, 2021
Boat brought to Jakhau for further investigation@PMO_NaMo @NIA_India @AjaybhattBJP4UK @ANI pic.twitter.com/W3Ahfb33vu
இதுகுறித்த, குஜராத் பாதுகாப்புத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “ குஜராத் கடலோர காவல்படை, குஜராத் தீவிரவாதத் தடுப்பு படை இணைந்து நடத்திய சோதனையில் அல் ஹூசைனி என்ற படகு சிக்கியது. அதில் 6 பாகிஸ்தானியர்கள் இருந்தனர். அந்த படகில் 77 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 400 கோடி ஆகும். இந்த படகை ஜகு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.’ இவ்வாறு அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த படகு ஒன்று மூலமாக 33 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வரப்பட்டு இந்திய கடற்படையினரால் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 300 கோடி ஆகும்.
மேலும் படிக்க : Google year in search 2021: வீட்டில் ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி? 2021ல் இந்தியர்கள் கூகுளில் தேடிய டாப் 10 செர்ச் பட்டியல்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்