புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: பகுதி நேர வேலை, ஆதார் அப்டேட் என ஏமாந்த மக்கள்!
புதுச்சேரியில் பகுதி நேர வேலை, ஆதார் அப்டேட் எனக்கூறி புதுச்சேரியில் 6 பேரிடம் ரூ.2.11 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்துள்ளனர்.

பகுதி நேர வேலை, ஆதார் அப்டேட் எனக்கூறி 2.11 லட்சம் ஆன்லைனில் மோசடி
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆண் நபரை அறிமுகம் இல்லாத நபர் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பகுதிநேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய ஆண் நபர், ரூ.1 லட்சம் செலுத்தி பல்வேறு டாஸ்குகளை முடித்துள்ளார். அதன்பேரில் அவரது கணக்கில் லாபத்துடன் சேர்த்து அதிக தொகை காண்பித்துள்ளது. அதனை அவர் எடுக்க முயன்றும் முடியவில்லை. சம்பந்தப்பட்ட நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
அதேபோல், தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஆண் நபர், ஆன்லைனில் டேப்லட், பவர்பேங்க் ரூ.38,788க்கு ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார். காந்திநகரை சேர்ந்த ஆண் நபர், தனது மகனுக்கு ஆன்லைனில் வரன் தேடியுள்ளார். இந்நிலையில் அவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு, திருமண தகவல் மையத்தின் பிரதிநிதி என அறிமுகம் செய்து கொண்டு, வரனுக்காக பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி ரூ.2,400ஐ மோசடி செய்துள்ளார்.
இதேபோன்று, பெரியகாலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஆண் நபருக்கு ஆதார் அப்டேட் எனக்கூறி அவரது வாட்ஸ்அப்க்கு APK File வந்துள்ளது. இதனை நம்பிய அவர், வங்கி, OTP உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரத்தை அபேஸ் செய்துள்ளனர். கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஆண் நபரிடம் முத்ரா லோன் அதிகாரி பேசுவது போல் ரூ.10 லட்சம் கடனை குறைந்த வட்டிக்கு வழங்குவதாகவும், அதற்கு நடைமுறை கட்டணம் எனக்கூறியும் ரூ.3,750ஐ அபகரித்துள்ளார்.
கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஆண் நபர், வாட்ஸ்அப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து சிகரெட் லைட்டர்களை ஆன்லைனில் ரூ.16,200க்கு ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார். மேற்கண்ட பாதிக்கப்பட்ட 6 பேரும், ஆன்லைன் போர்ட்டல் மூலமாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் சைபர்கிரைம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் எச்சரிக்கை மற்றும் அறிவுரை
புதுச்சேரி இணைய வழி போலீசார், “இணையத்தில் ஏதேனும் பொருளை வாங்கும் முன்பும் அதன் உண்மைத்தன்மையை நன்கு ஆராய்ந்து, விற்பவரின் முழுமையான விபரங்களையும் சரிபார்த்து பார்த்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தோன்றும் கவர்ச்சியான விளம்பரங்களை உடனடியாக நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக புகார் அளித்தால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாகும் என்பதால், எந்த குற்றச்சம்பவத்தையும் மறைக்காமல் உடனடியாக தகவல் தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எங்கே, எப்படி புகார் அளிப்பது?
இணைய குற்றச்செயல்களுக்கு உள்ளானால் அல்லது சந்தேகத்துக்கிடமான எந்த தகவலையாவது காணும்போது, பொதுமக்கள் பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்:
- தேசிய அளவிலான இலவச உதவி எண்: 1930
- புதுச்சேரி சைபர் செல் எண்கள்: 0413-2276144 / 9489205246
- மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in
- இணைய தளம்: www.cybercrime.gov.in
விழிப்புணர்வே பாதுகாப்பு
ஆன்லைன் உலகில் அதிகரித்து வரும் போலி விளம்பரங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் தங்களுக்குள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது தான் மிகச் சிறந்த பாதுகாப்பு. குறிப்பாக பண்டிகை நாட்களில் வரும் சலுகை விளம்பரங்களைப் பார்த்து உடனடியாக நம்பாமல் சற்று ஆராய்ச்சி செய்தால், பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.





















