செவிலியரை கட்டி வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை..! சுகாதார மையத்திலே நிகழ்ந்த கொடூரம்..!
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 வயதுடையவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நான்காவது நபர் தப்பியோடியுள்ளார்.
சத்தீஸ்கரில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் செவிலியர் ஒருவர் கட்டி வைக்கப்பட்டு, வாய் கட்டப்பட்டு, நான்கு நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மைனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 வயதுடையவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நான்காவது நபர் தப்பியோடியுள்ளார் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
தான் தாக்கப்படுவதை குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் கேமராவில் பதிவு செய்ததாகவும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் செவிலியர் குற்றம் சாட்டியுள்ளார். மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள சிப்சிபி கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுகாதார நிலையத்தில் செவிலியர் தனியாக வேலை செய்வதைக் குற்றம் சாட்டப்பட்டவர் நோட்டம் விட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, சுகாதார மையத்திற்குள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நுழைந்து, அவரை கட்டிப்போட்டு, அவரது வாயை இறுக்கி, பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், செவிலியர் தனது பெற்றோருக்கு தகவல் அளித்து போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி நிமேஷ் பரையா கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பூபேஷ் பாகேல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசுக்கு எதிராக பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ வினய் ஜெய்ஸ்வால் கூறுகையில், "பாஜக அரசியல் செய்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
தொலைதூர பகுதிகளில் பணிபுரிவது குறித்து சுகாதார பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் சத்தீஸ்கர் அரசை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தலைமை சுகாதார அலுவலர் பிரதிமா சிங் கூறுகையில், "எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாங்கள் வேலை செய்ய மாட்டோம்" என்றார்.
கடந்தாண்டு டெல்லியில் சராசரியாக தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 13,892 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும். அந்த ஆண்டு, 9,782 வழக்குகள் பதிவாகியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் 19 பெருநகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் 32.20 சதவீதம் ஆகும்.
டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது.