பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காத வடமாநில இளைஞருக்கு 'பளார்’ ... டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட்..
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காத பயணி ஒருவரை டிக்கெட் பரிசோதகர் கை நீட்டி அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காத பயணி ஒருவரை டிக்கெட் பரிசோதகர் கை நீட்டி அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ரயில் பணயம் மேற்கொள்பவர்களுக்கு பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் என்கிற ரீதியில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதில் பொதுப்பெட்டி, அமரும் இருக்கை, படுக்கை வசதி, ஏசி கோச்கள் என மாறுபட்ட கட்டண விகிதத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இதேபோல் தான் ரயில் நிலையத்தில் பயணம் செய்பவர்களை வழியனுப்பவோ, அல்லது ரயில் நிலைய நடைமேடைகளை பயன்படுத்தவோ பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
ரூ.10க்கு கிட்டதட்ட 3 மணி நேரம் கால அவகாசத்தில் வழங்கப்படும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை பெறாமல் சில பொதுமக்கள், பல நேரங்களில் அபராதம் கட்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்படியான நிலையில், சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காத பயணி ஒருவரை டிக்கெட் பரிசோதகர் அடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று வழக்கம்போல துணை தலைமை டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா பணியில் இருந்தார்.
அவர், டிக்கெட் பரிசோதனை நடத்திக் கொண்டிருந்த நேரம், வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அவரிடம் பிளாட்பார்ம் டிக்கெட் உள்ளதா என அக்ஷயா கேட்டுள்ளார். ஆனால் அந்த நபரிடம் பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து நிலைய அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளார். அந்த நபர் தான் ரயில் நிலைய நடைமேடைக்கு வரவில்லை என்றும், அதன் எல்லையில் தான் நின்று கொண்டிருந்ததாகவும், அபராதம் செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்றும் இந்தியில் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அக்ஷயா, நீ வேண்டுமானால் தமிழில் பேசு, என்னால் இந்தியில் எல்லாம் பேச முடியாது என ஆவேசமாக கூறி கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் டிக்கெட் பரிசோகதர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கவில்லையென்றால் அவர் மீது அபராதம் அல்லது சிறை தண்டனை உட்படுத்தாமல், ஏன் கை நீட்டி அடிக்கிறீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பி விமர்சனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோகதர்கள் அக்ஷயா, ஹரிஜான் இருவரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.