Crime: நண்பர்களுடன் மது அருந்தும்போது வாலிபர் கொடூரக்கொலை...நெல்லையில் பயங்கரம்
நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பழவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்தவர் ஐயப்பன் என்பவரின் மகன் அஜித் (வயது 25). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு நட்பு வட்டம் அதிகம் எனவும் கூறப்படுகிறது. அந்த பழக்கத்தின் அடிப்படையில் அஜித் தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக வைத்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று மதியத்திற்கு மேல் அஜித் தனது நண்பர்களுடன் சேர்ந்து பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புது காலனி பகுதியில் மது அருந்தி உள்ளார்.
அப்போது போதையின் உச்சகட்டத்தில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. அப்போது உடனிருந்த நண்பர்கள் அஜித்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவரது இரு கைகளையும் துண்டித்து, பின் கழுத்து மற்றும் தலை பகுதியில் கொடூரமாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த அஜித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இக்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அஜித்திற்கும் அவரது நண்பர்களுக்குமிடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளதாகவும், அதனை மனதில் வைத்துக்கொண்டு மது அருந்தும் பொழுது அவரை கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதே போல மது அருந்த சென்றவர்கள் அரிவாளை வைத்திருந்தார்கள் என்றால் கொலை சம்பவத்தை நிகழ்த்தும் நோக்கில் அரிவாளை மறைத்து கொண்டு வந்து கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை தொடர்பாக ஒரு சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பழவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்