Crime: பணத்திற்காக கொல்லப்பட்ட பன்றி பண்ணை உரிமையாளர்; உறவினர் கைது - நெல்லையில் பரபரப்பு
பன்றி பண்ணை வைத்து சேமித்த பணத்தை உறவினர் ஒருவரே திருடிச் சென்றதோடு செல்லத்துரையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அரிராம் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (73). இவர் முக்கூடல் அருகே அரிய நாயகிபுரம் அணைக்கட்டு அருகே டாஸ்மாக் மதுபான கடை அருகே பன்றி பண்ணை அமைத்து நடத்தி வந்தார். இதனால் தினமும் இரவு பன்றி பண்ணையிலே செல்லத்துரை தங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று வெகு நேரம் ஆகியும் செல்லத்துரை வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் செல்போனிற்கு தொடர்பு கொண்ட போது அவர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் உறவினர்கள் பண்ணைக்கு தேடி சென்றனர்.
அப்போது செல்லத்துரை கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் பன்றி பண்ணை வளாகத்தில் இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் முக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சேரன்மகாதேவி டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஜீன்குமார், ஷேக் அப்துல் காதர், சப்- இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடா்ந்து நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள், மோப்பநாய் உள்ளிட்டவை சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து செல்லத்துரை உடல் பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து முக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், செல்லத்துரையின் சொந்த ஊர் தென்திருப்புவனம் எனவும், இவரது முதல் மனைவியும், மகனும் இறந்துவிட்டனர். அதன் பின்னர் 2-வது திருமணம் செய்துள்ளார். முக்கூடலில் கடந்த 5 வருடமாக பன்றி பண்ணை நடத்தி வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன் பன்றிகளை விற்று பணத்தை சேர்த்து வைத்துள்ளார். அந்தப் பணமும் திருட்டுப் போனது தெரிய வந்தது. இதனால் பணத்தை திருடவந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் செல்லத்துரை படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்லத்துரையின் உறவினரான பாலசுப்பிரமணியன் (32) என்பவர் செல்லத்துரையிடம் இருந்த பணத்தை அபகரிக்கும் நோக்கில் அவரது கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தப்பியோடிய பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். பன்றி பண்ணை வைத்து சேமித்த பணத்தை உறவினர் ஒருவரே திருடிச் சென்றதோடு செல்லத்துரையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்